விக்கியைத் தோற்கடிக்க அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுடன் கைகோர்த்தது உதயன்?

 2
2

ஒற்றையாட்சிக் கட்சிதான் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு அகில இலங்கைத் தமிழ் காங்கிரசினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி உருவாகியதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட்டோர் விக்னேஸ்வரன் தொடர்பாக அவதூறுகளை பரப்பிவருகிறார்கள். இவர்களின் அவதூறுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்ட கேள்வி பதிலில் தமிழ் காங்கிரசின் ‘கபடத் தனங்களை’ வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழ் மக்களுக்கு ஜி.ஜி. பொன்னம்பலம் இழைத்த துரோகங்கள் வரலாற்றுப் பக்கங்களில் பரவிக் கிடக்க, தனது பாட்டனால் உருவாக்கப்பட்ட கட்சியைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார் கஜேந்திரகுமார்  என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. விக்னேஸ்வரனின் எழுச்சியானது தங்கள் குடும்பக் கட்சியின் மீள் எழுச்சிக்குத் தடையாக இருக்கும் என நம்புவதாலேயே விக்னேஸ்வரனை கஜேந்திரகுமார் இலக்கு வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் சொற்படி விக்கினேஸ்வரன் நடக்கிறார் என விமர்சிக்கும் கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் அண்மையில் தமிழ் மக்களைக் கொன்றொழித்த இந்திய அமைதிப்படைக்கு அஞ்சலி செலுத்தி நடைபெற்ற இந்தியக் குடியரசு தின நிகழ்வில் முன்வரிசையில் அமர்ந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்..

விக்கியின் விமர்சனத்திற்கு பதிலடி தருகின்றோம் என்ற போர்வையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சட்ட ஆலோசகர் சுகாஸ் அவர்கள் நேற்று ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தியிருக்கிறார். அவ் ஊடகச் சந்திப்பில் கஜேந்திரகுமாரின் பாட்டனார் ஜி.ஜியின் துரோகங்களுக்கு வெள்ளையடிக்க முயன்றார். அத்துடன் முன்னுக்குப் பின் முரணான தகவல்களுடன் பொய்களைக் கொண்டு விக்னேஸ்வரனை வில்லனாக்க முயன்றார் சுகாஷ். சுகாஸின் பொய்பரப்புரைக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘விக்கியை நினைத்து அழுதுவதா சிரிப்பதா’ என்று தலைப்பிட்டு ஒரு முழுப் பக்கத்தில் சுகாஸின் செய்தியைப் பிரசுரித்துள்ளது உதயன் நாளிதழ். இந்த ‘பேப்பர் கட்டிங்’கை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசினர் பரவலாக பேஸ்புக்கில் பகிர்ந்துவருகின்றனர். அண்மைக்காலங்களில் எழுக தமிழ் ஒன்றுக்கு எதிராக இருந்த சரவணபவனின் உதயனும் எழுக தமிழ் 2க்கு எதிராக இருந்த கஜேந்திரகுமார் அணியினரும் ஒன்று சேர்ந்து ‘விக்கி எதிர்ப்பு’ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.