ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு தேர்தலில் முடிவு கட்டுங்கள் – அனுர வேண்டுகோள்

anurakumara
anurakumara

“நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஜனநாயகத்துக்கு முரணான ராஜபக்ச குடும்ப ஆட்சியில் நாடு சிக்கிக்கொள்ளாமல் தடுக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தற்போது அரசுக்கு எதிராகச் செயற்படும் நோக்கம் கிடையாது. எனவே, நாடாளுமன்றத்தில் மக்களின் உரிமை மீறப்படும்போது அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தியை வலுப்படுத்த மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.” எனத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்தார்..

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் தற்போது நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன. அதற்குப் பதிலாக ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், பல முக்கிய அமைச்சுக்களைத் தன்வசம் கொண்டுள்ள அமைச்சராக சமல் ராஜபக்சவும் , ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள முக்கிய ஜனாதிபதி செயலணிகளின் பிரதானியாக பஸில் ராஜபக்சவும் கொண்ட குடும்பம் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது. இது ஜனநாயக ஆட்சி கிடையாது. எனவே, பொதுத்தேர்தலில் இந்தக் குடும்ப ஆட்சிக்கு நாட்டு மக்கள் முடிவு கட்ட வேண்டும்.

ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்படும் அதேவேளை மூன்று பிரதான காரணிகளில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். தேர்தலைக் காரணம் காட்டி எந்தவொரு பிரஜையும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக் கூடாது, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளின் உயிருக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடாது, அரசியல்வாதிகளுக்குப் பிரசாரங்களின் ஊடாக தமது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதற்குச் சாதாரண சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே அந்த மூன்று காரணிகளாகும். இந்தக் காரணிகளை கவனத்தில்கொண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தற்போது மக்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவதில் நேரம் இல்லை. மாறாக ரணில் – சஜித் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினையும் சிறிகொத்தாவை யார் கையகப்படுத்திக் கொள்வது என்ற குறுகிய அரசியல் நோக்கமே அவர்களிடம் காணப்படுகின்றது.

கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில் போரை நிறைவு செய்து நடத்தப்பட்ட தேர்தலில் 18 இலட்சத்துக்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ராஜபக்ச அரசு வெற்றி பெற்ற போதிலும் நாடா ளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 20 உறுப்பினர்கள் அதற்கு உதவி செய்தனர். அதேபோன்ற அச்சுறுத்தல் தற்போதும் காணப்படுகின்றது.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சி எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசுக்கு எதிராகச் செயற்படுவதற்குப் பதிலாக அதே வழியில் பயணிக்கும் கட்சியாகவே காணப்படும். இவ்வாறானதொரு நெருக்கடி நிலைமையிலேயே பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் நாம் தேசிய மக்கள் சக்தியாகப் பலமான கூட்டணியாகக் களமிறங்கியுள்ளோம். எனவே, எமது கூட்டணியை வலுப்படுத்துமாறு நாம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

நாடாளுமன்றத்தில் மக்களின் உரிமைகள் மீறப்படுகின்றபோது அந்த உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்ற அமைப்பாக தேசிய மக்கள் சக்தி செயற்படும். அதற்கான பலமான கட்சியாக நாம் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.

நாடாளுமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனம் நிலவுகின்றது. நாட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும்போது அது நாடாளுமன்றத்தைப் பாதிக்க வேண்டும் என்று மக்கள் பிரார்த்திக்கும் நிலைமையே காணப்படுகின்றது. நாடாளுமன்றத்தின் கொள்கையை மதிப்பவர்கள் இல்லாமை, நாடாளுமன்றத்துக்குரிய கௌரவம் வழங்கப்படாமை மற்றும் ஊழல், மோசடிக்காரர்கள் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். இவற்றைச் சரி செய்ய தேசிய மக்கள் சக்தியின் பலமான குழு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்” – என்றார்.