கோவிட் நோயினால் காசநோய் தொற்றலிலும், பரம்பலிலும் ஏற்பட்டுள்ள பாதகநிலை

Untitled 1 8

காசநோய் மைககோ பக்றீரியம் தியுபகுலோபிஸ் என்ற பக்றீரியாவால் ஏற்படுகின்றது. இது சுவாசம் மூலம் பரவும் நோயாகும். உலகில் இன்றைக்கு 8000 வருடங்களாக இந்நோய்க்கிருமி உள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் 1 பில்லியன் மக்கள் காசநோயினால் இறந்து உள்ளனர். உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் காசநோய் கிருமித்தொற்றுக்கு உள்ளானவர்கள். அதாவது 2 பில்லியன் மக்கள் காசநோய்த்தொற்றுக்கு உள்ளாகியவர்கள். காசநோய்த்தொற்று உடைய அனைவரிலும் காசநோய் ஏற்படுவது இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களிலேயே காசநோய் நிலை ஏற்படுகின்றது.

உலகில் ஆண்டு தோறும் 10 மில்லியன் மக்கள் காசநோயாளி ஆகின்றனர். இதில் 3 மில்லியன் மக்கள் இனம் காணப்பட்டு சிகிச்சையினைப் பெறுவதில்லை. 1.3 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் காசநோயால் இறக்கின்றனர். 1.1 மில்லியன் சிறுவர்கள் காசநோயால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர்.

கோவிட் நோயும், காசநோயும், சுவாச அறிகுறிகளுடன் ஏற்படுகின்றது. இதில் இருமல், காய்ச்சல் என்பன பொதுவாக இருக்கும். கோவிட்நோய் வைரசினால் ஏற்படுகின்றது. நோய்க்கிருமி தொற்றி 2 நாட்களில் இருந்து 14 நாட்களில் நோய் அறிகுறி ஏற்படும். காசநோய் பற்றீரியாவால் ஏற்படுகின்றது. நோய்க்கிருமி தொற்றி நோய் அறிகுறிகள் தெரிய 3-6 மாதங்கள் வரைச் செல்லலாம். கோவிட்நோயில் மூக்கடைப்பு, மூக்கில் இருந்து நீர் சிந்தல், தொண்டை நோ என்பன இருக்கும். இவை காசநோய் அறிகுறிகளாக பொதுவாக காணப்படுவதில்லை.

கோவிட் நோயின் வியாபாகத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட சமூக முடக்கம் காசநோய் கண்டறிதலிலும் சிகிச்சையளிப்பதிலும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி சமூக முடக்கம் காசநோய் கண்டறிவதில் 25 விழுக்காடு வீழ்ச்சியினையும் காசநோய் இறப்பு வீதம் 13 வீத உயர்ச்சியினையும் ஏற்படுத்தி உள்ளது. இது இதுவரை உலகில் மேற்கொள்ளப்பட்ட காசநோய்க் கட்டுப்பாட்டினை 5 வருடங்கள் பின்னோக்கிச் செலுத்தி உள்ளது.

கோவிட் தாக்கத்தினால் உலகில் காசநோய்த் தொற்று உடையவர்களின் எண்ணிக்கை 2 பில்லியனில் இருந்து 3 பில்லியனுக்கு அதிகரிக்கலாம். காசநோயாளிகளின் எண்ணிக்கை 10 மில்லியனிலிருந்து 15 மில்லியனுக்கு வருடத்துக்கு அதிகரிக்கலாம். ஆண்டுதோறும் இனங்காணப்படாத காசநோயாளிகள் 3 மில்லியனிலிருந்து 5 மில்லியனுக்கு அதிகரிக்கப்படலாம். மருந்துக்கு எதிர்ப்புத் தன்மையுடைய காசநோயாளிகள் 0.5 மில்லியனிலிருந்து 1 மில்லியனுக்கு ஆண்டுதோறும் அதிகரிக்கலாம். சிறுவர்களில் காசநோய் 1.1 மில்லியனிலிருந்து 2 மில்லியனுக்கு ஆண்டுதோறும் அதிகரிக்கலாம். காசநோயினால் இறப்பவர்கள் 1.3 மில்லியனிலிருந்து 2 மில்லியனுக்கு ஆண்டுதோறும் அதிகரிக்கலாம்.

கோவிட் சமூக முடக்கம் காசநோய்க்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிப்பதினை பாதித்து உள்ளது. இதனால் பல காசநோயாளிகள் சிகிச்சையை தொடராது கைவிட்டு உள்ளனர். இது சமூகத்தில் காசநோய் பரவ மேலும் ஓர் காரணியாக அமைகின்றது.

இன்று உலகில் தினமும் சுமார் 2 இலட்சம் மக்கள் கோவிட் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். கோவிட் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தாழ்நிலைக்கு சென்று இருக்கும். இந்நிலையில் காசநோய் தொற்று ஏற்பட்டவர்களில் காசநோய்நிலை ஏற்படும் சாத்தியம் அதிகம். இதனால் உலகில் காசநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் உலகில் காசநோய் தொற்று உடையவர்களின் எண்ணிக்கையும் 33வீத விழுக்காட்டில் இருந்து 40 வீத விழுக்காடு வரை அதிகரிக்கலாம். உலக சுகாதார நிறுவனத்தின் உலகில் காசநோயினை இல்லாது ஒழிக்கும் செயற்திட்டத்தில் இது பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே மறுசீரமைக்கப்பட்ட காசநோய் ஒழிப்புச் செயற்திட்டதினை கோவிட் பாதிப்பின் ஊடே செயற்படுத்தல் வேண்டும். நெருக்கீடுகள் உருவாவது அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காகவே என்பதனை உலகளாவிய ரீதியில் கோவிட் நெருக்கீட்டில் காச நோயினை எதிர்கொள்ளத் திட்டமிடலில் நோக்க வேண்டும்.
கோவிட் நோய் தாக்கத்தினால் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தியின் தாழ்நிலை சமூகத்தில் காசநோய் பரவலில் அதிகரிப்பை ஏற்படுத்துவதுடன் மருந்துக்கு எதிர்ப்புத் தன்மையுடைய காசநோய்ப் பரவலை அதிகரிக்கும்.

சிறுவர்களில் காசநோய் ஏற்படாது இருப்பதற்காக செலுத்தப்படும் BCG தடுப்பு மருந்து சமூகமுடங்கலில் வழங்காமையும் காசநோய் பரவலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்து விரைவான காசநோய் கண்டறிதலில் ஏற்பட்ட கோவிட் தாமதம், காசநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தலில் ஏற்பட்ட கோவிட் தாமதம், காசநோய் ஆய்வுகூடச் சோதனைகள் குறைவடைந்தமை. உயிரோட்டமான காசநோய் கண்டறிதலில் ஏற்பட்ட தளர்வுகள் காசநோயாளிகளை இனங்காணுவதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட் தாக்கத்தினால் மருந்துகளின் உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு, மருந்துகளின் இறக்குமதியில், விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பு காசநோய்க்கு சிகிச்சையளிப்பதில் பாதிப்பினை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தும். கோவிட் தாக்கத்தின் பொருளாதார மந்தநிலை போசாக்கு உள்ள உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு அல்லூட்டம் ஏற்படும். இது கோவிட் தாக்கத்தின் பின் காசநோய் ஏற்படுவதில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும். கோவிட்டுக்கு பின்பான சமூக உளநெருக்கீடு ஆழம் மிக்கதாகவும் வன்முறைகளுக்கூடாக அதனை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இது தனிநபர்மட்டம், குடும்ப மட்டம், சமூக மட்டம், இன மத முரண்பாடுகள், நாடுகளுக்கு இடையிலான பிணக்குகள் வரை அதிகரித்து உள்ளது.

ஒரு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி குறைவடையும்போது நாட்டு மக்களின் அவலங்களை திசை திருப்ப ஆட்சியாளர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வர். இதனை இன்று உலகில் சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம், வடகொரியாவின் போர் முனைப்பு, ரஸ்சியா, துருக்கி என்பன லிபியாவில் தாக்குதல் என்பன மூலம் அறியலாம். அதாவது சமூகத்தின் கூட்டான சீர்குலைவும் உலக அமைதி இன்மைக்கும் கோவிட் தாக்கம் இட்டுச் சென்று உள்ளது. இதனால் காசநோய்க்கட்டுப்பாடு பின் தள்ளப்படும்.

கோவிட் நோய்க்குரிய சமூகப்பீதியும், காச நோய்க்குரிய சமூக வடுவும், காசநோயாளர்களை வைத்தியசாலைக்கு வருவதை பிற்போடுகின்றது. மற்றும் சுவாசநோய் தொடர்பான சமூக ஒதுக்குதல், மற்றும் கோவிட் நோய்க்கான தனிமைப்படுத்தல், காசநோயாளர்களையும் தவறாக வீடுகளில் முடங்க வைக்கின்றது. மேலும் கோவிட்நோயினால் அதிகரித்த வறுமை, அதிகரித்த போதைப்பாவனைகள் காசநோய் பரவலில் பாதகமான நிலையினை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் பில்லியன் கணக்கான மக்கள் காசநோயுடன் தொடர்பாக நெருக்கமான வாழ்வு வாழ்கின்றனர். அடர்த்தியான சனத்தொகை, காற்றோட்ட வசதி குறைந்த வாழிடம் என்பவற்றிற்கு மேலாக கோவிட் காரணமான சமூக முடக்கம் காரணமாக காசநோயாளிகள் தமது வீட்டினுள்ளே பலருக்கு கோவிட் நோய் தொற்றினை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் அதிக அளவான சிறுவர்கள் காசநோயினால் பாதிக்கப்படுவார்.

எனவே உலகில் காசநோய், மனித நாகரீகத்தில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாது இருப்பதற்கு அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக காச நலன் பேணல் அமைய வேண்டும். காசநோய் பரவும் ஏது நிலைகளைக் குறைத்தல் வேண்டும். ஆய்வுகூட ஆற்றல் பண்முகப்படுத்தப்படல் வேண்டும். துரிதநோய் கண்டறி செயற்றிட்டம் அமுலாக்கப்படல் வேண்டும். காசநோய்க்கான சிகிச்சை வசதிகள் பூரணமாக அளிக்கப்படல் வேண்டும். காசநோய் சமூகத்தில் விரகாது இருப்பதற்கு வறுமை ஒழிப்பு நிவாரணம் வழங்கப்படல் வேண்டும்.

இரைதேடும் காசக் கிருமிகளினால்
    இரையாகும் நுரையீரல் அதனால்
திரைபோடும் வாழ்விற்கு
    வரையிடுவோம் சிகிச்சையினை
விரைவாகும் நலத்திற்கு கரை காண்போம்.

இரண்டு கிழமைகள் இருமல்
    இரவுக்கு முன் காய்ச்சல்
உடல்குன்றல் சளியுடன் உதிரம்
    நாட்டம் குன்றல் உணவில் இவையே காச அறிகுறிகள் 
வதிவும் இடங்களில் நெருக்கம்
    புசிக்கும் உணவில் போசனையின்மை
பதியில் நோயுடன் வாழல் கதியில் காசம் பரவ ஏது

எவரெதிலும் இருமுதல் ஆகாது காண்பீர்
எங்கெங்கெல்லாம் துப்புதல் ஆகாது காண்பீர்
காற்றோட்டமுள்ள இடத்தில் வாழுதல் நலன் காண்பீர்
சூரியக்கதிர் பட வாழ நலன் காண்பீர்
போசணை உணவு உண்ணக் காண்பீர்

நோய்குறி உடையோரைப் பரிசோதிக்கக் காண்பீர்
நோயுற்றோர்க்கு உதவுதல் காண்பீர்
மருந்துகளை இடையில் கைவிடலாகாது காண்பீர்
உற்றோரையும் சுற்றோரையும் சோதித்தல் காண்பீர்
காசம் இல்லை இல்லை உலகில் என்றிடக் காண்பீர்
அதற்கு இன்றே விழித்து தடைகளை மாற்றிடக் காண்பீர்

மருத்துவர். சி. யமுனானந்தா
MBBS, DTCD