கருணா தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

karuna amman
karuna amman

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான வீடியோ காட்சிகளை பெற்றுக் கொண்டு, அது தொடர்பான விரிவான விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே குற்ற விசாரணை பொலிஸாருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பில் குற்ற விசாரணை பொலிஸார் B34859/01 என்ற இலக்கத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அம்பாறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, இராணுவத்தினர் 3000 பேரை கொலை செய்ததாக கருணா கூறிய கருத்துத் தொடர்பான காணொளிகள் தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பானதாக குற்ற விசாரணை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

அதன் காரணமாக அந்த காட்சிகளின் முழுமையான பிரதிகளை ஊடக நிறுவனங்களிடம் பெற்றுக் கொள்வதற்கான உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு குற்ற விசாரணை பிரிவினால் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த கோரிக்கைகளை ஆராய்ந்த நீதவான் குறித்த காணொளியை குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்குமாறு குறித்த ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.