அன்ரன் பாலசிங்கமும், சுமந்திரனும் ஒன்றா?: சிறிதரனின் பேச்சுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு!

.மயூரன்
.மயூரன்

சுமந்திரனை அன்ரன் பாலசிங்கத்தோடு ஒப்பிட்டு பேசியதை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும், நாடாளுமன்ற தேர்தலில் வவுனியா மாவட்ட வேட்பாளருமான செ.மயூரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பல வலிகளோடு இந்த மண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. எங்களை ஆளுகின்றவர்கள் நாங்களாக இருக்க வேண்டும். எனவே தமிழர்களாக பிறந்தவர்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

எங்களுடைய காலத்தை படைக்கின்ற போராளிகளாக இளைஞர்களும் இந்த தேசிய அரசியலிலே இணைந்து கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

முள்ளிவாய்க்காலில் எங்கள் போராட்டம் முடிவடைந்து விட்டது என்று சொல்கிறவர்களுக்கு பறைசாற்றும் விதமாக இந்த தேர்தலில் எமது வாக்கு பலத்தை நாம் நிரூபித்து ஒவ்வொரு இளைஞனும், போராளிகளும், அனுபவமிக்கவர்களும் நெஞ்சிலே சுமந்து இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய வேட்பாளருமாகிய ஸ்ரீதரன், சுமந்திரனை அன்ரன் பாலசிங்கத்தோடு ஒப்பிட்டு பேசியதை மிகவும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

அதேநேரம் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்ற விதத்திலே அவருடைய கருத்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாக மாறியிருக்கின்றது.

போராட்டத்தினுடைய வடுக்களை உணராத, வலிகளை உணராத, போராட்டம் என்றால் என்னவென்று தெரியாதவரே சுமந்திரன். அவ்வாறானவரை தமிழ் தேசியத்தின் போராட்ட வரலாற்றில் அண்ணன் பிரபாகரனிற்கு ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கத்தோடு ஒப்பீடு செய்வது தமிழ் மக்களினால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது முன்னாள் போராளிகளினால் ஏற்றுக்கொள்ள முடியாததும், தமிழ் தேசியத்தை நேசிக்கின்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததுமான ஒரு கருத்து.

அதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை இந்த தேர்தலிலே இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களை விட குறைந்த அளவு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்வார்களேயானால் அதற்கான முழு பொறுப்பினையும் சுமந்திரன் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்