ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 44பேர் உயிரிழப்பு!

jappan
jappan

ஜப்பானில் அதிக கனமழை காரணமாக, வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், குறைந்தது 44பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு மற்றும் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் தென்மேற்கில் 40,000க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், தப்பிப்பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.

இதுவரை 800பேர் மீட்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் தெரிவித்துள்ளார். பதின்மூன்று பேர் கணக்கில் வரவில்லை. அடுத்த இரண்டு நாட்களில் மேலும், 30 சென்ரி மீற்றர் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்காலங்களில் வெப்பமண்டலங்களில் இருந்து பெய்யும் மழையின் தாக்கத்தை, மேற்கு ஜப்பான் தாங்குவது இயல்பு என்றாலும், கடந்த இரண்டு நாட்களில் கியூஷு தீவில் உண்மையிலேயே அசாதாரணமான மழை பெய்துள்ளதாக கூறப்படுகின்றது.

குமாமோட்டோ மற்றும் ககோஷிமாவின் மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நூறாயிரக்கணக்கான மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.

இருப்பினும், கொரோனா வைரஸின் ஆபத்து காரணமாக, தங்குமிட மையங்கள் குறைந்த அளவிலேயே உள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரி தோஷிஹிகோ தெரிவித்துள்ளார். சமூக விலகல் விதிகளின் காரணமாக சில வெளியேற்றப்பட்டவர்கள் பல தங்குமிட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் தொற்றுநோய்க்கு பயந்து தங்கள் கார்களில் தங்கியுள்ளனர்.

இப்பிராந்தியத்தில் இதற்கு முன் இதுபோன்ற மழைப்பொழிவு பதிவாகியதில்லை என ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குமா நதியிலிருந்து வெளியேறும் தண்ணீர், ஏராளமான இடங்களில் உள்ள குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளது. ஒரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த பதினான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். மேலும் 50 பேர் மீட்கப்பட்டனர்.