கரையோர பகுதியை பறித்தெடுப்பதற்கான நடவடிக்கையே இந்த தொல்பொருள் செயலணி! இரா.சாணக்கியன்

sanakkiyan
sanakkiyan

ஆளும் கட்சி ஊடாக மட்டக்களப்பில் உள்ள மக்களுக்கு நம்பிக்கையற்ற நிலை காணப்படுவதை நேற்று உணர்ந்து கொண்டதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

கரையோரப்பகுதியை தங்களுக்கு பறித்தெடுப்பதற்கான நடவடிக்கையே இந்த தொல்பொருள் செயலணி எனவும், இது தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

வேற்றுச்சேனையில் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் செயற்பாட்டிற்கு பொலிஸார் சில தடைகளை ஏற்படுத்த முனைந்த போது சிறிய முறுகல் நிலையேற்பட்டது.

அந்த காணியானது உறுதியைக்கொண்ட காணி அந்த காணியின் சொந்தக்காரர்கள் பிறந்து வளர்ந்த இடம் அது. சில தினங்களுக்கு முன்னர் பிக்கு ஒருவர் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் வந்து அந்த காணியை அளவீடு செய்து அதில் எதிர்காலத்தில் கல்போட்டு தொல்பொருள் வேலைத்திட்டங்களை செய்யப்போவதாக தெரிவித்திருந்த நிலையில் அதில் அதிருப்தியடைந்த மக்கள் அதற்கான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

அந்த வேளையில் நேற்று முன்தினம் என்னையும் அழைத்திருந்தனர்.நானும் சென்றிருந்தேன்.உண்மையில் இந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக இந்த ஜனாதிபதியை கொண்டுவர வேண்டும் என்று செயற்பட்டவர்கள் எல்லாம் அங்கு வந்து மக்களுடன் இணைந்து தாங்களும் எதிர்ப்பதாக காட்டமுற்பட்ட போது அதற்கு மக்கள் எதிர்ப்பினை தெரிவித்து அவர்களை விரட்டியடித்தனர்.

இது ஆளும் கட்சியில் போட்டியிடுவோருக்கு ஒரு சாட்டையடியாகும்.அவர்கள் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளதை நாங்கள் அங்கு உணர்ந்தோம்.

இவர்கள் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதாக மக்கள் சிலர் மீது குற்றம் சுமத்தியிருந்தார்கள். அது முற்றிறும் உண்மை தான்.

அரசாங்கம் உருவாக்கிய தொல்பொருள் ஆய்வு செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, தொடர்பான அதிருப்திகளையும், இவ்வாறான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் அரசாங்க கட்சியில் இருப்பவர்கள் மக்களோடு இருந்து கொண்டு கோசம் போட வேண்டியதில்லை. அவர்கள் அவர்களது அரசாங்கத்திடம் தெரிவித்து இதற்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். நாங்கள் எதிர்க்கட்சியில் இருப்பதனால் அதற்கான எதிர்ப்பினை தெரிவிக்க முடியும்.

நாங்கள் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நாங்கள் இது தொடர்பில் கதைக்க முடியும்.அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வந்து அதனை கதைக்கமுடியாது என்பதை மக்கள் அவர்களுக்கு தெளிவாக கூறியுள்ளனர்.

அங்கு வந்த மங்களராமய விகாராதிபதி கூறுகின்றார் இந்த மாவட்டத்தில் விகாரை அமைப்பது என்றால் நான் தான் அமைப்பேன் என்று கூறுகின்றார்.அவரிடமும் நான் கூறியுள்ளேன் அவரால் இங்கு எந்த விகாரையினையும் அமைக்க முடியாதென்று.விகாராதிபதி அங்கு வந்து தமிழ் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்று கேட்டபோது தான் நான் அவருடன் முரண்பட வேண்டிய நிலையேற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை ஏனைய அரசியல்வாதிகளை எதிர்த்தது அரசியல் ரீதியாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற எதிர்ப்பலையாகும். அது வேத்துச்சேனையில் இருக்கின்ற எதிர்ப்பலை மாத்திரமல்ல எனவே ஏனைய அரசியல்வாதிகள் நடிக்கும் நாடகத்தை மக்கள் நன்கு புரிந்துள்ளார்கள்.

சிலர் என்னைப் பற்றி விமர்சிக்கின்றார்கள். நான் யாரையும் கொலை செய்யவோ, களவு செய்யவோ இல்லை. என்னைப்பற்றி விமர்சிப்பதென்றால் எனது கடந்த கால அரசியலைப் பற்றித்தான் விமர்சிக்கலாம் அது மக்களுக்குத் தெரியும். அது எனக்கு இன்னும் பலமாக அமையும்.

எனவே இவ்வாறான முக்கியமான தொல்பொருட்கள் விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குகளைப் பதிவு செய்யவுள்ளது. அது தொடர்பில் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

தற்போது கிடைத்துள்ள தடை கூட எனது வெற்றியைத் தடுப்பதற்கான செயற்பாடாகத் தான் இதனை நான் பார்க்கின்றேன். இதனை மக்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள். மக்கள் போலி அரசியல்வாதிகளை தொடர்ந்து மக்கள் விரட்டியடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.