தம்பி பிரபாகரன் சொன்னதைப்போல மக்கள் விழிப்படைய வேண்டும்! விக்கி நேர்காணல்

vikki
vikki

விழிப்பு தான் விடுதலைக்கு முதல்படி என்பார் தம்பி பிரபாகரன். மக்கள் விழிப்படைய வேண்டும். இதுவரை காலமும் தம்பியின் பெயரைச் சொல்லி அரசியல் செய்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அவரை பிழையானவராகக் காட்டி அரசியல் செய்ய முயல்கின்றார்கள். காரணம் அவர்கள் சிங்களத் தலைவர்களிடம் இருந்து நல்ல பெயர் எதிர்ப்பார்க்கின்றார்கள். மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வந்தவர்களின் முகத்திரை இன்று கிழிந்துள்ளது. இத்தகையவர்களுக்கு ஓய்வு கொடுத்து, இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகின்ற, சுயநிர்ணய ஆட்சியை வலுவாகக் கோருகின்ற எங்களுக்கு இந்தமுறை வாய்ப்பைத் தாருங்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையில் இடம்பெற்ற நேர்காணலை நன்றியுடன் மறுபிரசும் செய்கின்றது தமிழ்க்குரல்.

ஒரு மாகாணத்தின் முதல்வராக இருந்த நீங்கள் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றில் போட்டியிடத் தேவைதானா?

பதில்; தேவை. மக்கள் சேவையை வழி நடத்த அதிகாரம் தேவையாக இருக்கின்றது. மக்கள் சேவை எனும் போது மக்களை ஒன்றிணைப்பது, அவர்களின் வாழ்வாதாரம் உள்ளடங்கலான அன்றாட பிரச்சனைகளைத் தீர்ப்பது, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை உறுதிப்படுத்தல், சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல் என்று பலவும் அதனுள் அடங்கும். முதல்வர் என்ற பதவியை அனுபவித்துவிட்டு, அதன் கௌரவங்களுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்பும் ஒருவர் ஓய்வை நோக்கிச் செல்லலாம். ஆனால் முதல்வர் பதவிக்கு வந்த பின்னர், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் நான் அங்கம் வகித்த கட்சியின் தலைமைத்துவத்தின் ஏமாற்றுதல்களையும் கண்ட பிறகு ஓய்வெடுப்பது சுயநலச் செயலாக நான் கருதினேன். எம் மக்களுக்கு கொள்கை ரீதியான ஒரு மாற்று அரசியல் பாதையை உருவாக்கிவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதனால்தான் இந்தப் பயணம். எங்கள் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் பல ஆண்டுகளாகப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து வருகின்றார்கள். அவர்கள் சேவை மனப்பான்மையையும் மக்கள் நேய மனோபாவத்தையும் வெளிக் காட்ட வேண்டும். அவ்வாறான மனோபாவத்தை எம் கட்சியினரால் வெளிக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

 ஒருவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிலேயே அங்கம் வகித்திருந்தால் அக் கட்சியின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராகவும் தாங்கள் இருந்திருக்க முடியுமல்லவா?

பதில்;  நான் எந்தக் காலத்திலும் அரசியலுக்கு வரவே விரும்பவில்லை. அதை பலமுறை கூறியிருக்கின்றேன். முதல்வராக வந்த தொடக்கத்தில் இருந்து பலமுறை கூறி வந்திருக்கின்றேன். ஆனால் வந்த பின் கண்டவை எனக்கு வியப்பை ஊட்டின. தொடர்ந்தும் கட்சியில் இருக்க வேண்டும், அதற்காகக் கட்சித் தலைவர்களுக்கு ஆமா போட வேண்டும். கட்சி மூலமாக தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளில் இருக்க வேண்டும், அதற்காக மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பதைவிடுத்து கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற மனோ பாவத்திலேயே எமது பிரதிநிதிகள் இருக்கக் கண்டேன். கட்சித் தலைவர்களும் அதையே எதிர்பார்த்தார்கள். அவர்களைப் போல  பதவிகளுக்காகவும் சுகபோகங்களுக்காகவும் நான் அரசியலுக்கு வந்திருந்தால் தொடர்ந்தும் முதல்வராக இருக்க ஆசைப்பட்டிருப்பேன். நான் இப்போது தமிழ் மக்களின் எதிர்காலத்தை அச்சத்துடன் காண்கின்றேன். கொள்கை ரீதியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு வேகம் தான் என்னை இந்த மாற்றுத் தலைமைப் பயணத்திற்குள் கொண்டு வந்துள்ளது.

தனியாக அரசியல் பயணத்தை தொடங்கத்தான் வேண்டுமா?

பதில்;  இந்த நிர்பந்தத்தை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தான் உருவாக்கினார்கள். எனக்கு எதிராக ஒரு குற்றப் பிரேரணையை உருவாக்கி, அதை இலங்கை அரசின் பிரதிநிதியான அன்றைய ஆளுரிடம் கொண்டு சென்று கையளித்தார்கள். எந்த ஆளுநர் வேண்டாம் என்றார்களோ, அந்த ஆளுனரிடம் சென்று என்னை எதிர்ப்பதற்காக மண்டியிட்டார்கள். நான் மக்களுக்கு உண்மையாக இருந்து கொள்கையில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் செயற்பட விரும்பியமை அவர்களுக்கு சிக்கலாக இருந்தது. அப்படி சிக்கலானவர்களைவிட்டு நான் கொள்கைப் பற்றுடன் பயணிப்பதுதானே சிறந்தது? தமிழர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று ஒதுங்கியிருக்க என்னை என் மனம் விடவில்லை.

 தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீதான தங்கள் பிரதான விமர்சனம் என்ன?

பதில்;  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தை ஆதரித்தபோது, எம் மக்களின் பிரச்சினைகள் பலவற்றை தீர்த்திருக்கலாம். அந்தப் பொன்னான வாய்ப்பை அவர்கள் தவறவிட்டார்கள். அன்றைக்கு பௌத்தத்திற்கு முன்னுரிமையை ஆதரித்தார்கள். வடக்கு கிழக்கில் விகாரைகள் கட்டும் தீர்மானங்களையும் தமிழர்களுக்கு எதிரான பல திட்டங்களையும் ஆதரித்தார்கள். அவற்றின் விளைவுகள்தான் இன்றைக்கு தொல்லியல் ஆக்கிரமிப்புக்கள் எம் மண்ணில் பெருமளவில் நடக்க இடமளித்துள்ளன. அத்துடன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று நாங்கள் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால் இனப்படுகொலை சம்பந்தமான சர்வதேச விசாரணையை நடத்தவிடாமல் கால அவகாசத்தை வழங்கி, அதனை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளில் எமது பிரதிநிதிகள் நடந்து கொண்டமை ஏற்கத் தக்கன அல்ல.

தமிழ் தலைவர்கள் மக்களுக்கு என்ன கடமையை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்;  உண்மையும் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும், கொள்கைப்பற்றும் தான் தமிழ்த் தலைவர்கள் வெளிப்படுத்த வேண்டிய பண்புகள். வேறு கடின விடயம் ஒன்றுமில்லை. நான் வடக்கில் மக்களுடன் மக்களாக வாழ்ந்த காலத்தில்தான் நிறைய விடயங்களை உணர்ந்தேன். எங்கள் மக்கள் நிறைய தியாகங்களைச் செய்தவர்கள். அவர்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. அவர்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியாது. உண்மையில் மக்களுடன் மக்களாக வாழ்வதும் அவர்களுக்கு நேர்மையாக இருப்பதுந்தான் தமிழ்த் தலைவர்களின் கடமையாக இருக்க வேண்டும். இராஜதந்திரம் என்ற பெயரில் எம் மக்களுக்குத் துரோகம் இழைக்கக்கூடாது. இன்று மக்களுக்கு இது நன்றாக விளங்குகின்றது. இனியும் அதை எங்கள் அரசியல்வாதிகள் செய்ய முடியாது.

வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றியமையால் எதை சாதித்தீர்கள்?

பதில்; இதுவரை காலமும் இலங்கையில் தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளது இனப்படுகொலையே என்பதை இந்தத் தீவுக்குள் உள்ள சட்ட ரீதியான அல்லது ஜனநாயக ரீதியான சபை ஒன்றில் நிறைவேற்றியிருப்பதுதான் அதன் முக்கியத்துவம். தமிழ்நாட்டு சட்டமன்றத்திலும் வடக்கு மாகாண சபையிலுந்தான் இத்தகைய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரலாறு முழுவதும் ஒரு ஆவணமாக மாத்திரமல்லாமல், ஆயுதமாகவும் இருக்க இந்தத் தீர்மானம் வழி வகுத்துள்ளது. அதுதான் இலங்கை அரசுக்கு எம்மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. துரதி;டவசமாக எமது பிரதிநிதிகள் எனப்படுவோருக்கும் அதனால்தான் என்மீது கோபம். இது மிகக் கவலையான விடயம். அவர்கள் தேர்தல் கூட்டங்களிலும் ஊடகங்களிலும் பேசிவந்த இனப்படுகொலை என்ற விடயத்தைத் தானே நாம் தீர்மானமாக நிறைவேற்றினோம். ஆனாலும் அதன் காரணமாக அவர்களுக்கு என்மீது ஏன் கோபம் வந்துள்ளது என்பது ஒரு புரியாத விடயமாக உள்ளது. ஒரு வேளை அவர்களின் சுயநலமே அவர்கள் என்னை வெறுக்கக் காரணமாக இருந்திருக்கக்கூடும். ஆகவே எமது சுயநல அரசியல்வாதிகளின் முகத் திரையைக் கிழிக்கவும் இந்தத் தீர்மானம் உதவி செய்துள்ளது.

மக்களிடம் என்ன கோரிக்கையை முன் வைக்கின்றீர்கள்?

பதில்; விழிப்பு தான் விடுதலைக்கு முதல்படி என்பார் தம்பி பிரபாகரன். மக்கள் விழிப்படைய வேண்டும். இதுவரை காலமும் தம்பியின் பெயரைச் சொல்லி அரசியல் செய்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அவரை பிழையானவராகக் காட்டி அரசியல் செய்ய முயல்கின்றார்கள். காரணம் அவர்கள் சிங்களத் தலைவர்களிடம் இருந்து நல்ல பெயர் எதிர்ப்பார்க்கின்றார்கள். மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வந்தவர்களின் முகத்திரை இன்று கிழிந்துள்ளது. இத்தகையவர்களுக்கு ஓய்வு கொடுத்து, இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகின்ற, சுயநிர்ணய ஆட்சியை வலுவாகக் கோருகின்ற எங்களுக்கு இந்தமுறை வாய்ப்பைத் தாருங்கள் என்று கேட்கின்றேன். ஒரு புதிய அரசியல் சூழல் ஏற்படட்டும். இல்லாது போனால் எங்கள் புனிதங்களை அவமதிப்பவர்களுக்கும் எங்களை ஏமாற்றுபவர்களுக்கும் அங்கீகாரம் அளிப்பதுபோல ஆகும். அது எங்கள் மண்ணுக்கு நாங்களே இழைக்கும் துரோகம் ஆகிவிடும்.

உங்கள் பயணத்திற்கு மக்கள் எத்தகைய ஆதரவை வழங்குவார்கள் என நினைக்கின்றீர்கள்?

பதில்; தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எனக்கு ஒரு நெருக்கடி வந்தபோது இளைஞர்களும் மக்களும் திரண்டு வீதிக்கு வந்தார்கள். வடக்கு கிழக்கு எங்குமிருந்து வந்து யாழ்ப்பாணக் கோவில்த் தெருவில் நின்று எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். அந்த ஆதரவுக் குரல்தான் என் அரசியல் பயணத்தைத் தூண்டியது. எனக்கான கடமையை உணர்த்தியது. மக்கள் இம்முறை எங்களுக்கு அமோக ஆதரவைத் தருவார்கள். மக்கள் தரும் ஆதரவை அவர்களின் விடியலுக்காகக் கடுமையாகப் பயன்படுத்துவோம். சலுகை அரசியல், வியாபார அரசியல் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பதுடன் எமது கொள்கையை வலியுறுத்தி ஒரு முன் மாதிரியான புதிய அரசியலைத் தொடங்குவோம்.

நேர்காணல் – வனஜன்