கொரோனா கவிதைகள் | மனுஷ்ய புத்திரன்

manush
manush

கொரோனா வார்டிலிருந்து
அலைபேசியில்
திரும்பத் திரும்ப கேட்கப்படும் கேள்வி
ஒன்றே ஒன்றுதான்
“நான் இப்போது வீட்டுக்கு வருவதில்
ஒன்றும் பிரச்சினையில்லையே? ”

மறுமுனையில் தயக்கங்கள்
மறுமுனையில் மெளனங்கள்
மறுமுனையில் மாற்று ஏற்பாட்டிற்கான யோசனைகள்
மறுமுனையில் குழப்பமான பதில்கள்

மறுமுனையில்
யாரோ உடைந்து அழுகிறார்கள்

20.7.2020
காலை 9.38

ஒரு காதலைத் தெரிவிக்கும்போது ...

ஷிப்ட் முடிந்து அவசரமாகக் கிளம்பும் செவிலி
அவசரமாக ரிப்போர்ட் எழுதுகிறாள்
அவசரமாக மாத்திரைகளை எடுத்து
மேசையில் வைக்கிறாள்
‘உணவுக்குப்பின் அவசியம் சாப்பிடுங்கள்’
என்கிறாள் அவசரமாக
கவச உடையிலிருந்து விடுபடும் அவசரம்
ஒரு புறா, கூண்டுக்கம்பியில்
சிறகுகளை மோதிக்கொள்வது போலிருக்க்கிறது

அவசரமாக வெளியேறிச் சென்றவள்
இரண்டு நிமிடத்தில் திரும்பி வந்து
கதவைப் பாதி திறந்தபடி
” மறக்காமல் மருந்தை சாப்பிடுவீர்கள்தானே?”
என்கிறாள் தயவாக
அதற்குள் என் மறதியும்
எம் பொறுப்பற்ற தனமும்
அவளுக்கு எப்படியோ புரிந்துவிட்டிருந்தது

அவள் திரும்பி வந்த
இரண்டு நிமிடங்களில் நிகழ்வது
ஒரு செவிலியின் பணி அல்ல
அதைவிடவும் சிறந்த ஒரு அன்பு

19.7.2020
இரவு 10.08

மனுஷ்ய புத்திரன் - தமிழ் ...

இரண்டு கனிந்த கொய்யா பழங்களை
கத்தியில் அரிந்து
ஒவ்வொரு துண்டாக உண்டுகொண்டிருந்தேன்

அதுபோன்ற ஒரு கொய்யாப்பழத்தை
உண்பது அதுவே முதல் முறை
அதற்கு
இனிப்பு இல்லை
துவர்ப்பு இல்லை
பல்லிடுக்கில் அரைபடும் விதைகள்தவிர
வேறு எதுவுமே இல்லை
அது ஒரு காகிதத்தாலான
கொய்யாப்பழம்போலிருந்தது
கொய்யாப்பழங்கள் பற்றிய
என் ஆழ்மனப்பதிவுகள் அனைத்தையும்
அந்த இரண்டு கொய்யாப்பழங்களும்
அழித்துவிட்டன

செவிலி கொரோனாவார்டின்
கதவுகளைத் திறந்துகொண்டு வருகிறாள்
” அறையெங்கும் கொய்யாப் பழ வாசனை
மூக்கை துளைக்கிறது”
என்கிறாள் சிரித்துக்கொண்டே

அக்கணம்
எனது உலகம்
இரண்டாக பிளந்துவிட்டது
வாசனையுள்ள உலகம்
வாசனைகளற்ற உலகம்
ஒரு அறையில் இரண்டு உலகங்கள்
அவள் அந்தப்பக்கம்
நான் இந்தப்பக்கம்

நான் உண்ணும் கொய்யாப்பழங்கள்
சாத்தானின் தோட்டத்திலும்
அவள் உணரும் கொய்யாப்பழங்கள்
கடவுளின் தோட்டத்திலும்
விளைந்திருக்கின்றன

19.7.2020
இரவு 9.37

Manushya Puthiran on Twitter: "பரியேறும் பெருமாள் ...

கொரோனா வார்டில்
அழைப்பு மணியை அழுத்தி
ஒரு மணி நேரம்
தாமதாக வந்த வார்டு பாயிடம்
கத்தினேன்
” எனக்கு உதவி வேண்டும்
சிறு நீரை ஒருமணி நேரமாக
அடக்கிக்கொண்டிருக்கிறேன்
எவ்வளவு நேரம் காத்திருப்பது?
எனக்கு அடிவயிறு வலிக்கிறது”

வார்டு பாய்
தீம் பார்க் வாயிலில் நிற்கும்
கரடிபோல மெளனமாக
தலையசைத்தடி சொன்னான்

‘ மன்னியுங்கள் சார்
நான் இந்த பாதுகாப்பு உடையில்
ஏழுமணி நேரமாக நிற்கிறேன்
இடையில் கழற்றி மாட்ட முடியாது
அடிவயிறு வலித்ததால்
ஒன்றுகிருக்க போனேன். ‘

துயரகாலத்தின் சக்கரத்தின்
எல்லா கம்பிகளும்
ஒன்றுபோலவே இருக்கின்றன

19.7.2020
இரவு 8.06

பிரபல கவிஞரும் உயர்மை இதழின் ஆசிரியருமான மனுஷ்ய புத்திரன் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு உச்சமடைந்துள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குரலாக இக் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன.