சந்திரகுமாரை ஆதரிக்கிறீர்களா? – மருத்துவர் சத்தியமூர்த்திக்கு திறந்த மடல்

Aasiriyar paarvai 1
Aasiriyar paarvai 1

யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்திக்கு!

அண்மையில் கிளிநொச்சியில் முன்னாள் ஈபிடிபி கட்சியை சேர்ந்த சந்திரகுமாருக்கு ஆதரவு வேண்டிய ஒரு அரசியல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றுதள்ளது. இதில் கலந்துகொண்டு பேசி முன்னாள் கோட்டக் கல்வி அலுவலரை் அமிர்தலிங்கம், கிளிநொச்சியில் நடந்த சந்திரகுமார் ஆதரவுக்கூட்டத்தில் நீங்கள் கலந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல், தமிழ் தேசியப் பற்றாளர்கள் அனைவருக்குதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிப் போரில் மருத்துவப் பணியாற்றிய தங்களுக்கு இன அழிப்புப் போரின் வலியைப் பற்றி, அங்கே நடந்த கோரத்தாண்டவங்கள் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அக் காலத்தில் நீங்கள் ஆற்றிய பணிகளுக்காக உங்களை புலம்பெயர் தேசங்களில் உள்ள மக்கள் மதித்து கௌரவம் செய்து வருகின்றனர். இப்படி உயரிய நிலையில் உங்களை வைத்துப் பார்க்கையில் தமிழ்த் தேசிய விரோத சந்திரகுமாருக்கு தாங்கள் ஆதரவு அளிப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் உங்கள் கண்ணுக்கு முன்னாள் லட்சம் பேர் கொல்லப்பட்ட நிலையில், இறுதிப் போரில் எவரும் கொல்லப்படவில்லை என்று கூறும் சந்திரகுமாரை ஆதரிக்க முடியுமா? அன்று முள்ளிவாய்க்காலில் போர் நடந்து கொண்டிருந்த போது சந்திரகுமார் உள்ளிட்ட ஈபிடிபி மக்களின் அழிவுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கவில்லை. அத்துடன் 2011ஆம் ஆண்டில் கீதாஞ்சலியுடன் இணைந்து, சந்திரகுமார் ஜெனீவா மனித உரிமை அமர்வுகளுக்கு எதிராகவும் முள்ளிவாய்க்கால்  அழிவுக்கு ஆதரவாகவும் போராட்டம் செய்தார்.

அத்துடன் போர் வெற்றி விழாக்களில் கலந்து கொள்ளும் சந்திரகுமாரை, மண் மீட்புப் போராட்டங்களையும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களையும் முன்னாள் போராளிகளையும் காட்டிக் கொடுக்கும் அவரது அரசியலை நீங்கள் ஏற்றுக்கொள்ளுகிறீர்களா? நீங்கள் ஒருபோதும் தடம்மாற மாட்டீர்கள் என்றும் தமிழ் தேசிய வழியில் நியாயமாக பயணிப்பீர்கள் என்றும் கருதியே புலம்பெயர் தேசங்களில் இருந்து எமது மக்கள் நிதி உதவிகளை உங்கள் ஊடாக வழங்குகின்றனர்.

புலம்பெயர் தேசங்களில் உங்களுக்கு அளிக்கப்படும் கௌரவங்களும் நிதி உதவிகளும் தமிழ் தேசிய வழியில் மக்களுக்கு தொண்டாற்றவே தவிர, அடிதடி அரசியல் செய்யும் சந்திரகுமாரை ஆதரிக்கவல்ல. உங்கள் வைத்தியசாலைக் கடமைகளின் நிமித்தம் அரச தலைவரை சந்திப்பதும், அமைச்சரை சந்திப்பதும் உங்கள் பணி சார்ந்த விடயம். ஆனால் சந்திரகுமாரை சந்திப்பதும், அவரது அராஜக அரசியலுக்கு துணைபோவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல. புலம்பெயர் தேசங்களில் இருந்து எமது உறவுகள் பனியிலும் குளிரும் உழைத்த பணத்தை உங்களுக்கு வழங்குவது சந்திரகுமாருக்கு தேர்தல் பிரசாரத்தை செய்யவல்ல என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கின்றோம்.

எனவே, இந்த விடயத்தை தெளிவுபடுத்தி, பகிரங்கமான பதிலை நீங்கள் வழங்க வேண்டும். இதற்கு மௌனமாக இருப்பது நீங்கள் சந்திரகுமாரை ஆதரிப்பதை ஏற்றுக்கொள்ளுவதாகவே அமையும். அத்துடன் புலம்பெயர் தேசங்களில் உங்களுக்கு எதிரான பிரச்சாரங்களை செய்யவும், நிதி உதவிகளை முடக்கவும் வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதுடன், உங்கள்மீதான கௌரவம் முழுமையாக அகன்று போகும் என்பதையும் தாங்கள் உணர வேண்டும்.

தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்.