ரிஷாட், ஹிஸ்புல்லா, மொஹமட் ஏன் கைதாகவில்லை – ஞானசார தேரர்

i k
i k

ஸ்ரீலங்காவின் பெரும்பான்மையினமான சிங்கள பௌத்த மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக தனிச் சிங்கள அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான பொதுபல சேனா வலியுறுத்தியுள்ளது.


கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனிச் சிங்கள தலைவரை வெற்றிபெறச் செய்து ஆட்சிபீடம் ஏற்றியதைப் போன்று பொதுத் தேர்தலிலும் சிங்கள பௌத்த மக்கள் சரியான முடிவை தைரியமாக எடுக்க வேண்டும் என்று பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.


பொதுபல சேனா அமைப்பின் கொழும்பிலுள்ள தலைமை காரியாலயத்தில் நேற்றைய தினம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.


இது தொடர்பில் ஞானசாரா தேரர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எம்.எஸ்.எச் மொஹமட் என்கிற நபர் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்காக 100 கோடி ரூபா நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

நிதியை வைத்தியசாலைக்கு வழங்குவதாகக் கூறியிருந்தாலும் அவ்வாறு வழங்கப்படவில்லை. இதுகுறித்து மருத்துவமனையின் பணிப்பாளருக்குத் தெரியாது.

பணிப்பாளருக்கும் அச்சுறுத்தல் வழங்கியிருப்பதோடு பணிப்பாளரின் அறையை குண்டு வைத்து தகர்ப்பதாகவும் எச்சரித்திருக்கிறார்.


இவ்வாறு பெறப்பட்ட நிதி எங்கே சென்றது? யார் இதற்குப் பின்னால் இருக்கின்றார்கள்? பணம் காட்டிலா பதுக்கப்பட்டுள்ளது? குறித்த முஸ்லிம் நபர் குண்டு வைத்து தகர்ப்பதாக எச்சரித்தமை குறித்து முறைப்பாடு இருந்தும் விசாரணை எங்கே? கஜீதா என்கிற பதிவு செய்யப்படாத அமைப்பின் ஊடாக நிதி சேகரிப்பு நடத்தப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினமே அவருடைய வங்கிக் கணக்கிற்கு 20 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.


ஏப்ரல் 23ஆம் திகதி மேலும் இரண்டு மில்லியன் பெறப்பட்டுள்ளது. ஆகவே இந்த மொஹமட்டை கைது செய்தால் அவருக்கு யார் பாதுகாப்பு அளிப்பது? அரசியல் அரண் யார் கொடுப்பது என்பது அம்பலமாகிவிடும்.

இதேபோலவே ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் அவர்களைக் கைது செய்யாமல் அரசாங்கம் கொஞ்சி விளையாடுகிறது.


ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் குறித்தும் அம்பலமாகிய நிலையில் இன்னும் அது பறிக்கப்படவில்லை.

வில்பத்து சரணாலயம் குறித்து முறையிட்டோம். ரிஷாட் வசமுள்ள 3000 ஏக்கர் காணி குறித்தும் ஆவணங்களை வெளியிட்டோம். ஆனால் ஒரு விசாரணையும் இல்லை.


ஆகவே இவர் குறித்த விசாரணைக்கு ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு கோருகின்றேன் எனவும் அவர் அந்த ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.