கொரோனா தொற்றாளரை காப்பாற்ற இலங்கையில் புதிய கருவி கண்டுபிடிப்பு!

corono thamilkural
corono thamilkural

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் சுமார் 48 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது நாட்டிலும் இவ் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவையாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

இதன் அம்சமாக கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் வகையில் நவீன உபகரணமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பிஹான் ஹபுதந்திரியினால் ஒரே நேரத்தில் 4 நோயாளர்களுக்கு செயற்கைச் சுவாசத்தை வழங்கக்கூடிய சுவாசக்கருவி (Ventilator) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த உபகரணம் தொடர்பில் இன்றைய தினம் குறித்த வைத்திய அதிகாரியினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படுகின்ற காரணத்தால், நேரடியாகவே செயற்கைச் சுவாசக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.

எனினும் போதியளவான சுவாசக்கருவிகள் இன்மையால் வெளிநாடுகளில் இத்தொற்றுக்குள்ளான பலர் உயிரிழக்க வேண்டியேற்பட்டுள்ளது.

தற்போது எமது நாட்டில் சுமார் 500 சுவாசக்கருவிகள் உள்ள நிலையில், பிஹானின் கண்டுபிடிப்பின் மூலம் அந்தக்கருவிகளைப் பயன்படுத்தி 2000 நோயாளிகளுக்கு செயற்கை சுவாசத்தை வழங்கமுடியும் என்பது குறிப்பிடதக்கது.