சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நிதி சேகரிப்பதாக மோசடி!

3 oad
3 oad

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு எனக் கூறி நிதிசேகரிக்கும் சில நிகழ்வுகள் குறித்த தகவல்கள் ஜனாதிபதிஅலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

நிதியத்திற்கு நேரடியாக பணம் மூலமாகவோ காசோலைகள் மூலமோ அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வேறு வழிகளின் ஊடாக பங்களிப்பதை தவிர வேறு எவருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் நிதியை வழங்க வேண்டாம் என ஜனாதிபதியின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்கம் “சுகாதார நோய்த் தடுப்புக்காக” அனைத்து மக்களையும் உட்படுத்தியுள்ளது. அவர்களின் உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்டஅத்தியாவசிய பொருட்கள், சேவைகள் உற்பத்தி, விநியோகம் சுகாதார அதிகாரிகளினதும் தேர்தல் ஆணைக்குழுவின் சட்டதிட்டங்கள், அறிவுரைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, இத்தகைய மோசடி நடவடிக்கைகள் குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

011-2354479 அல்லது 011-2354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

வங்கிக்கு நேரடியாக செய்யப்பட்ட வைப்புகளுடன் நேற்று (02) வரை நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டுள்ள தொகை 314.5 மில்லியன் ரூபாவரை அதிகரித்துள்ளது.

டெலிகொம் பொறியியலாளர்கள் நலன் பேணல் நிதியம் மற்றும் இலங்கை மின்சாரசபையின் சுதந்திர பொறியியலாளர்கள் சங்கத்தினால் தலா ஒரு மில்லியன் ரூபாவும், காகில்ஸ் (சிலோன்) நிறுவனம் 50 மில்லியன் ரூபாவும் நேற்று நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும்.

சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.