தனிமைப்படுத்தப்பட்டவரையும் விட்டுவைக்காத கொரோனா

7s
7s

தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்பை நிறைவு செய்து வீடு திரும்பிய நபர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

தென் கொரியாவில் தொழில் புரிந்து வந்த நிலையில் நாடு திரும்பியவர்கள் வெலிக்கந்த – கந்தக்காடு இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட பின்னர், கடந்த 24 ஆம் திகதி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுடன் சென்ற களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதையடுத்து அவருடன் பஸ்ஸில்  பயணித்த காலி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆறு பேரில் ஒருவர் மாத்தறை கொட்டவில வைத்தியசாலையிலும், ஏனையோர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த 6 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை அறிய பீ.சீ.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக இவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.