விளக்கமறியல் கைதிகள் 2, 916 பேருக்குப் பிணை!!

3 ges
3 ges

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைக்கு அமைய, விளக்கமறியல் கைதிகள் 2 ஆயிரத்து 916 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சிறைச்சாலைக்கு ஜனாதிபதி சென்றிருந்தபோது, கைதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அவர்களுக்கான சலுகைகளை வழங்க ஜனாதிபதியால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

சிறு குற்றங்கள் மற்றும் பிணை நிபந்தனையை பூர்த்தி செய்ய முடியாது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிப்பதற்கு இந்தக் குழு பரிந்துரைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் 10 ஆயிரம் பேர் வரை மாத்திரம் தடுத்து வைக்கக்கூடிய நிலையில், தற்போது 26 ஆயிரம் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய சுகாதார நிலையைக் கருத்தில்கொண்டு பிணை வழங்கக்கூடிய கைதிகள் தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.