எந்தவொரு நிவாரணமும் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை:வேலுகுமார் கோரிக்கை

e1563660992753
e1563660992753

இலங்கையில் தொடர்ந்தும் மூன்றாவது வாரமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்ட எந்தவொரு நிவாரணமும் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதால் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள நிதிக் கொடைகளைக் கொண்டு பெருந்தோட்டங்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவருமான வேலுகுமார் கோரிக்கை முன்வைத்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமலிருப்பதற்காக தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக மக்களுக்கு வழங்கிவருவதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் தமிழர் பகுதிகளிலும் அதேபோல மலையக மக்களிடையேயும் அவை விநியோகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு இதுவரை 66 மில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளது என்று ஜனாதிபதி செயலகம் நேற்றைய தினம் இரவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, எந்தவொரு பேதமும் இன்றி அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸ அணியினருடன் நேற்றைய தினம் நடத்திய சந்திப்பின்போது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதி அளித்திருந்தார்.

எனினும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவருமான வேலுகுமார் இதுகுறித்து கருத்து வெளியிட்டார்.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட எந்த நிவாரணமும் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு இன்றுவரை கிடைக்கவில்லை என்றும் கூறினார்.