தேர்தலுக்கான செலவை அதிகரித்தது கொரோனா

3 wq
3 wq

சுகாதாரத்துறையின் ஆலோசனைகளைப் பின்பற்றி பொதுத்தேர்தலை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதால் தேர்தல் செலவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பிட்டுள்ளது.

சாதாரண சூழ்நிலையில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு குறைந்த பட்சம் 750 கோடி ரூபா செலவாகும் என்று தேர்தல் ஆணைக்குழு முன்னதாகக் கணிப்பிட்டிருந்தது. இதற்கான கோரிக்கையும் திறைசேரியிடம் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்தால், இந்தமுறை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்தே பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி சமூக இடைவெளியைக் கருத்திற்கொண்டு வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது என்பதுடன் பாதுகாப்புப் பணிகளுக்கு மேலதிக பொலிஸாரையும் ஈடுபடுத்த வேண்டியுள்ளது.

அத்துடன், தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கான முகக்கவசம், கைக்கவசம் உட்பட மேலும் பல தேவைகளுக்கும் நிதி ஒதுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வாக்காளர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான திட்டத்துக்கும் நிதி ஒதுக்கவேண்டிவரும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.