மஹிந்தவின் அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்கும் ஐ.தே.க. – பொதுச்செயலாளர் அகிலவிராஜ் தகவல்

1 f
1 f

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொள்ளும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எட்டாவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த அனைத்து உறுப்பினர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி அலரி மாளிகைக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். எனினும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. ஆகியன அழைப்பை நிராகரித்துள்ளன.  சந்திப்பில் கலந்துகொள்ளப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்னவென வினவியபோதே அகிலவிராஜ் காரியவசம் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவும், தேவையான சட்ட, திட்டங்களை இயற்றுவதற்காகவும் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிரணிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதற்கு அரச தரப்பிடம் இருந்து இன்னும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. இவ்விடயத்தை மீண்டும் வலியுறுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதற்கான ஓர் வாய்ப்பாக எதிர்வரும் 4ஆம் திகதி கூட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என நம்புகின்றோம். கூட்டத்தில் பங்கேற்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஒன்றுகூடி, அடுத்த கட்டம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்” – என்று அவர் மேலும் கூறினார்.