கோட்டாவின் கொக்கரிப்பு இலங்கைக்கு நல்லதல்ல! – சித்தார்த்தன்

Tharmalingam Sitharthan
Tharmalingam Sitharthan

“இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தால் சர்வதேச அமைப்புக்களின் நிறுவனங்களின் உறுப்புரிமையிலிருந்த இலங்கை விலகும் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவிப்பு ஒருபோதும் நாட்டுக்கு நல்லதல்ல. அதுவும் கொரோனா பாதிப்பில் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கையில் இப்படியான கொக்கரிப்புக்கள் நாட்டை மேலும் மோசமான நிலைமைக்கே கொண்டு செல்லும்.”என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

படைவீரர்கள் தின விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய கோட்டாபய, ‘எம்மைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் அர்ப்பணிப்புகளைச் செய்துள்ள படைவீரர்கள் தேவையற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக நான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்துத் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளோம். இவ்வாறான சூழலில் வெளிநாடுகளையோ அல்லது சர்வதேச அமைப்புக்களையோ பகைப்பது நல்லதல்ல. அவர்களை எந்த விடயத்துக்காக பகைத்தாலும் விளைவு நாட்டுக்குத்தான்.

தமிழ் மக்கள் விடயத்தில் சர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதற்காகப் பாடுபடுகின்றது. அவர்கள் அந்த அக்கறையைத் தொடர்ந்தும் வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எமது விருப்பம். இலங்கை இவ்வாறு விலகுமாக இருந்தால் அது எமக்குச் சிறிய பின்னடைவைத்தரும். ஆனாலும், நாம் விரைவில் அதிலிருந்து மீண்டு விடுவோம்” – என்றார்.