சஜித் அணியினர் இடைநிறுத்தம் ;ரணில் கடிதம் மூலம் அறிவிப்பு!!

9 lll
9 lll

மாற்று அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். கட்சியுடன் மீண்டும் இணைய விரும்பி செயற்படுபவர்களை இணைத்துக்கொள்வதில் எவ்விதமான சிக்கலும் இல்லை. ஆனால் அது மத்திய செயற்குழுவின் பெரும்பான்மையின் பிரகாரமே இடம்பெற வேண்டும்.”

  • இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் வெவ்வேறு கட்சிகளில் இணைந்து செயற்படும் ஐ.தே.க. உறுப்பினர்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் அல்லது வேறு கட்சிகளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கும், அவற்றின் மூலம் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள உறுப்பினர்களுக்கும் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

“வேறு கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் 3.3(அ), 3.3(ஆ), 3.4(அ), 3.4(ஆ), 3.4(எ), 3.4(இ) உள்ளிட்ட உறுப்புரைகளில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு ஏற்ப கட்சி யாப்பை மீறிச் செயற்பட்டிருக்கிறீர்கள். ஐ.தே.க. பொதுச் செயலாளரினால் 3.4(உ) உறுப்புரைக்கு அமைய எனக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளேன்.

குறிப்பாக அந்த அறிக்கை மூலம் கட்சி யாப்பில் 3.3(அ), 3.3(ஆ), 3.4(எ) உள்ளிட்ட உறுப்புரைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளேன்.

அத்தோடு கட்சி யாப்பின் 3.4(உ) உறுப்புரைக்கு அமைய கட்சியின் உச்சகட்ட நலன் மற்றும் பாதுகாப்பு என்பவற்றைக் கருத்தில்கொண்டு கட்சி உறுப்புரிமை மற்றும் வகித்த பதவியிலிருந்து உடனடியாக அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

3.3(அ) உறுப்புரைக்கமைய வேட்புமனுத் தாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குதல் மற்றும் அவருக்கு எதிராகப் போட்டியிடும் வேறு இடத்திற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்கப்பட மாட்டாது.

கட்சி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படாவிட்டால் அது தொடர்பில் தீர்மானிப்பதற்காக அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு உள்ளது. அதனை ஏற்றுக்ள்ள வேண்டிய பொறுப்பு உறுப்பினர்களுக்கு உண்டு.

3.3 (ஆ) உறுப்புரைக்கமைய வேறு கட்சிகளில் போட்டியிடுபவர்களுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என்பதோடு அது கட்சியின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகும்.

3.4(உ) உறுப்புரைக்கமைய கட்சியின் மத்திய செயற்குழுவின் அனுமதியின்றி எந்தவொரு உறுப்பினருக்கும் வேறு கட்சியின் சார்பில் போட்டியிட முடியாது. வேறு கட்சி அல்லது அரசியல் கூட்டணியின் சார்பில் பதவிகளை வகிப்பதற்கோ அல்லது ஜனாதிபதி பதவிக்காக வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கோ முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒறுவர் அல்லது மாகாண சபை உறுப்பினராக அல்லது உள்ளூராட்சி உறுப்பினராக வேறு கட்சிகளில் பரிந்துரைக்கப்பட முடியாது.

கட்சியின் உச்சக்கட்ட நலன் மற்றும் பாதுகாப்பு என்பவற்றைக் கருத்தில்கொண்டும் மேலும் கட்சி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் கட்சி உறுப்புரிமை மற்றும் வகித்த பதவியிலிருந்து உடனடியாக அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஏதேனும் கருத்துத் தெரிவிக்க வேண்டுமானால் இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்று 7 நாட்களுக்குள் தெரிவிக்குமாறும் அறிவிக்கப்படுகின்றது” – என்றுள்ளது.