ஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியாக சிறிகொத்தா தரப்பினர் ; நளின் பண்டார

5 tttc
5 tttc

ஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியினராகவே சிறிகொத்தா தரப்பினர் உள்ளனர் என சஜித் ஆதரவு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “சிறிகொத்தாவிலுள்ள சிறியளவிலான ஐக்கிய தேசியக் கட்சியினர், இன்று மொட்டுக் கட்சியின் அடிவருடிகளாக மாறியுள்ளனர்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதை விடுத்து, அரசாங்கத்துடன் இரகசிய உடன்படிக்கைகளை செய்துக் கொண்டு, ஒத்துழைத்துச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் ஒரு பகுதியாகத்தான், ரணில்- ரவி- அகில உள்ளிட்ட தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்மை, கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

இதிலிருந்தே ஐக்கிய மக்கள் சக்தி எனும் எமது கூட்டணி மீதான இவர்களின் பயம் வெளிப்படுகிறது. இன்று மத்திய வங்கி பிணைமுறி மோசடியாளர்கள்கூட வெளியில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அரசாங்கத்துக்கும், இந்தக் குழுவினருக்கும் இடையிலான உடன்படிக்கைக்கு இணங்கவே இன்று அனைத்தும் இடம்பெற்று வருகின்றன. இவர்களை ஐக்கிய தேசியக் கட்சியினர் என்றுக்கூட நாம் கூறவிரும்பவில்லை. உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியினர் எம்முடன்தான் இருக்கிறார்கள்.

கட்சியின் ஆதரவாளர்களும் எம்முடன் தான் இருக்கிறார்கள். இன்று சிறிகொத்தவின் இலக்கும், அரசாங்கத்தின் இலக்கும் நாமாகத்தான் இருக்கிறோம். சஜித் பிரேமதாசவை நோக்கி அனைத்துக் குண்டுகளும் வீசப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன” என்றார்.