இன்றைய தெரிவே நாளைய விடியல்! – சங்கக்கார

sangakkara
sangakkara

“எங்களுடைய இன்றைய தெரிவுகளே நாளை எங்கள் பிள்ளைகள் சுவீகரிக்கப்போகும் கலாசாரதைத் தெரிவு செய்யும்” என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் தனது ருவிட்டர் பதிவில் குமார் சங்கக்கார பதிவிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது ருவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இனவாதம் மற்றும் அநீதிக்கு எதிரான அமெரிக்க மக்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் ஒரு தெளிவான பாடமாக அமைந்துள்ளது.

நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி அல்லது இலங்கையாக இருந்தாலும் சரி அல்லதுபோனால் வேறொரு நாடாக இருந்தாலும் சரி நமது உணர்வுகளையும் உணர்திறனையும் தீர்மானிக்க வேண்டியது அரசு அல்ல. அது உங்களதே அல்லது என்னுடைய விருப்பம்.

நமது ஞானம், இரக்கம், பச்சாத்தாபம் மற்றும் புரிதலை அரசு தீர்மானிக்கக்கூடாது.

நம் இதயங்கள் மற்றும் மனதின் வெளிப்படைத்தன்மையை மற்றவர்கள் கட்டுப்படுத்தவோ முடியாது அல்லது வேறுபாடு மற்றும் வேறுபாடுகளைத் தழுவி மதிப்பிடுவதற்கான நமது திறனை கட்டுப்படுத்தவே முடியாது.

அதை நாமே தெரிவு செய்கின்றோம். எங்கள் பிரதிநிதிகளையும் நாங்கள் எங்கள் சொந்த மக்களிடமிருந்தே தெரிவு செய்கின்றோம். அவ்வாறு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் அரசுக்குக் கொண்டு வரும் குணநலன்களுக்கு நாங்களே பொறுப்பு. அவர்களின் மாற்றத்துக்கும் நாங்களே பொறுப்பு. அவர்களது இயல்பை நமது செல்வாக்கு தீர்மானித்துள்ளது..

எங்கள் தெரிவுகள் அரசின் அணுகுமுறைகள், செயல்கள், கொள்கை மற்றும் சட்டத்தை வழிநடத்துகின்றன. சிறந்த அரசையும் சிறந்த ஆட்சியையும் நிறுவ நாம் சிறந்த மனிதர்களாக இருக்க வேண்டும்.

அந்தவகையில், எங்கள் பலங்களும் பலவீனங்களும் ஒருவருக்கொருவர் நடத்தை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றில் பிரதிபலிக்கின்றன.

மரியாதை மற்றும் புரிதல் ஆகியவற்றால் உலக கலாசாரத்தை அமைப்பதற்கு, சாதாரண குடிமகனான நாம் ஒன்றாக இணைந்து அசாதாரணமான மாற்றத்தை அடைய முடியும். அறியாமைக்கும் தப்பான எண்ணத்துக்கும் இடமில்லாத, உண்மையான சுதந்திரம் ஆட்சி செய்யும் உலக கலாசாரம்.

நாம் தைரியமாக இருக்க வேண்டும், நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், நாம் முன்னெடுக்கும் பயணத்தில் தீவிரமாக இருக்க வேண்டும்.

எங்களுடைய இன்றைய தெரிவுகளே நாளை எங்கள் பிள்ளைகள் சுவீகரிக்கப்போகும் கலாசாரத்தைத் தெரிவு செய்யும்.

எங்கள் வாழ்க்கையைப் பற்றி நாம் பெருமைப்பட விரும்பினால், எங்கள் பிள்ளைகள் எங்கள் பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதை பார்க்க விரும்பினால், நாம் சிறந்தவர்களாக இருப்போம். நம் குழந்தைகளுக்காக, ஒருவருக்கொருவர், நம்மிடம் அதைக் கோருவோம்” – என்றுள்ளது.