நம்புங்கள் – தீர்வு உறுதி – தமிழர்களிடம் மகிந்த கோரிக்கை!

mahinda
mahinda

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினையாக அரசியல் பிரச்சினை இருக்கின்றது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய நாடாளுமன்றத்தில் நாம் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். தீர்வை நாம் வழங்கியே தீருவோம். எனவே, தமிழ் மக்கள் முதலில் எங்களை நம்ப வேண்டும்.” எனத் தமிழ் மக்களைக் கோரியுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

மஹிந்த ராஜபக்ச அரசியலில் ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்தமையையொட்டி அவரை உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் செவ்வி கண்டு வருகின்றன. அந்தவகையில், வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய நாடாளுமன்றத்தில் பேச்சுக்களை ஆரம்பிப்போம். அந்தப் பேச்சுகளின் பிரகாரம் அரசியல் தீர்வு தொடர்பான திட்ட வரைபு தயாரிக்கப்படும். அதை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். இதுவே அரசியல் தீர்வு தொடர்பான என்னுடையதும் எனது அரசினதும் நிலைப்பாடாக இருக்கின்றது.

தமிழ் மக்களுக்குத் தீர்வை நாம்தான் வழங்க வேண்டும். வெளிநாடுகள் வந்து தீர்வு தரும் என்று எவரும் நம்பக்கூடாது. ஏனெனில் இது உள்நாட்டுப் பிரச்சினை. நாம்தான் பேசித் தீர்க்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் எம்முடன் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றார்களோ அவ்வளவு விரைவாக தீர்வை நாம் காண முடியும். ஒற்றுமையாக – நெருக்கமாக இருந்தால்தான் எதனையும் சாதிக்க முடியும். முரண்பட்டு நின்றால் எந்தப் பயனும் இல்லை” – என்றார்.