அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தயாராக இல்லை – கணேஸ் வேலாயுதம்

NW11

“வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தயாராக இல்லை.”

என்று ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“300 கோடி ரூபா நிதி அள்ளி கொட்டி ஆரம்பிக்கப்பட்ட இரணைமடு குடிதண்ணீர் திட்டம் இடைநடுவில் நிற்கின்றது. யாழ்ப்பாணம் மக்களின் வாக்குகளுக்காக அலையும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிளிநொச்சி தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு விடுவிக்காமல் தடுத்து வருகின்றார்.

இரணைமடு முறைகேடு தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு அறிக்கையை கடைசி வரையில் வெளியிடாது முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன் மூடி மறைத்திருந்தார்.
அதேபோல் வலிகாமம் வடக்கு குடிதண்ணீரில் கழிவு ஓயில் கலக்கப்பட்ட விவகாரத்தையும் மூடி மறைத்து ஆளாளுக்கு அறிக்கை விடுத்தார்கள். இறுதியில் தென்னிலங்கையினை சேர்ந்த சுற்று சூழலியாளரே கழிவு ஓயில் கலந்தமையினை அம்பலப்படுத்தினார்.

அதே போன்று வடக்கு மாகாணசபையின் மிகப்பெரிய ஊழலான நெல்சிப் முறைகேடுகள் தொடர்பான விசாரணை ஏழு வருடங்களாகவும் கிடப்பில் கிடக்கின்றது.

இவை தொடர்பில் எல்லாம் பேசுவதற்குக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் எவரேனும் தயாராக உள்ளார்களா?.
வடக்கு மாகாணத்தின் கல்வி, விளையாட்டு, விவசாயம், கடற்றொழில் போன்ற துறைகளை ஊழல் இல்லாத வகையில் முன்னேற்றுவதற்காகவே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றேன். மக்கள் என்னை நாடாளுமன்றம் அனுப்புகின்றபோது இவற்றைச் செய்து முடிப்பேன். அடுத்த முறை தேர்தலுக்கு எத்தகைய விளம்பரங்களும் இல்லாமலேயே எனது செயற்பாட்டைப் பார்த்து மக்களே என்னை நாடாளுமன்றம் அனுப்புவார்கள்.

வடக்கு மாகாணத்தின் கல்வியானது பின் தங்கிய மாகாணமாக ஆகிவிட்டது. இதனை உடனடியாக முன்னேற்ற வேண்டும். அதுபோல் விளையாட்டுத் துறையில் எமது மாணவர்கள் ஆர்வத்துடன் இருக்கின்ற போதும் போட்டிகளில் பங்கு பற்றி தேசிய மட்டத்துக்குத் தெரிவு செய்யப்படுகின்றார்களே தவிர சர்வதேச ரீதியில் சென்று சாதனை நிலைநாட்டவில்லை. ஆனால், எனது எண்ணம் வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத் துறையை சர்வதேச ரீதியில் கொண்டு செல்வதற்கு உதவுவதே.

அதுபோன்று விவசாயம் கடற்றொழில் போன்றவற்றில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி இரு தொழில் துறைகளையும் முன்னேற்ற வேண்டிய தேவையின் அவசியமுள்ளது. இங்குள்ள அரசியல்வாதிகள் தமக்கான தேவைகளைத்தான் நிறைவேற்றிக்கொள்கின்றார்களே தவிர மக்களுக்காக எதையும் செய்யவில்லை. இவர்களுடன் சேர்ந்தவர்களாகவே அரச அதிகாரிகளும் செயற்படுகிறார்கள்.

எமது காலத்தில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வாறு அந்தத் திட்டங்கள் செய்யப்படுகின்றன, எத்தகைய நிதி செலவு செய்யப்படுகின்றது என்பது தொடர்பில் மக்களுக்கு வெளிப்படுத்துவேன்.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதும் நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கிடைக்கும் அத்தனை சலுகைகளையும் என்ன என்பதை ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்துவதுடன், வாகன அனுமதிப்பத்திரம் உட்பட அனைத்து வகையான சலுகைகளையும் மக்களுக்காகவே செலவு செய்வேன்” – என்றார்.