விக்கினேஸ்வரன் சமஸ்டி ஆட்சியைக் கேட்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்: சரத் வீரசேகர கொந்தளிப்பு

cv sarath
cv sarath

ஒற்றையாட்சி இலங்கையை சமஷ்டி நாடாக மாற்ற எவருக்கும் இடமளிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறுகிறார். அதேபோல் தேர்தல் ஆணைக்குழுவில் உள்ள ஹூல் இலங்கை சமஷ்டி நாடாக வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறு செய்ய அவர்களுக்கு இருக்கும் உரிமை என்ன?

நாட்டை சமஷ்டி நாடாக மாற்றவே பிரபாகரன் 30 நாடுகளுடன் போரில் ஈடுபட்டார். 30 ஆண்டுகளாக பிரபாகரனினால், போரில் செய்ய முடியாததை, இவர்கள் இருவரும் இணைந்து யோசனை மூலம் செய்ய முயற்சிக்கின்றனர்.

இதற்கு அமையவே நல்லாட்சி அரசாங்கமும் அரசியலமைப்பு யோசனை ஒன்றை கொண்டு வந்தது. நாட்டை பிளவுப்படுத்துவதற்காக நிபந்தனைகளை விக்னேஸ்வரன் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். அவர் முதலமைச்சராக இருந்த போது சிங்கள இனத்திற்கு எதிராக 27 யோசனைகளை நிறைவேற்றினார்.

1947 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆட்சி செய்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் படிப்படியாக இனப்படுகொலை செய்ததாக முதலாவது யோசனையை கொண்டு வந்தார்.

இரண்டாவது யோசனையாக அன்றில் இருந்து இன்று வரை தமிழ் பெண்களை சிங்கள ஆட்சியாளர்கள் கருத்தடைக்கு உட்படுத்தியதாக யோசனை கொண்டு வந்தார். இவை எந்தளவுக்கு பொய்யான கேலிக்குரிய யோசனைகளாக இருக்கின்றன.

விக்னேஸ்வரன் இந்த யோசனைகளை நிறைவேற்றும் போது சஜித் பிரேமதாச உட்பட நல்லாட்சி அரசாங்கத்தினர் எவரும் இவற்றை நிராகரிக்கவில்லை.

அதேபோல் ஹூல் தொடர்பாகவும் நாம் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்து கொண்டு நாட்டை சமஷ்டி நாடாக மாற்ற வேண்டும் என்று கூற முடியாது.

விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான காலம் வந்துள்ளது.

கருணா அம்மான் எங்களுடன் இல்லை. அவர் எமது கட்சியின் ஊடாகவும் போட்டியிடவில்லை.அவர் எங்களுடன் இருக்கின்றார் என்பது தவறானது.

கருணா அம்மான் வெளியிட்ட கருத்து மிகவும் பாரதூரமானது. இதற்கு எதிராக கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போரில் வெற்றி பெற அவரும் ஓரளவுக்கு பங்களிப்பை வழங்கினார். கருணாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது, ஏற்கனவே செய்த கொலைகளுக்கு தண்டனை வழங்க முடியாமல் போகும்.

எனினும் அவர் தற்போது கூறியுள்ள விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.