100 கோடி ரூபாய் நட்டஈடு கோரி யஸ்மின் சூக்காவுக்கு இலங்கை உளவுத்துறை கடிதம்!

yasmi
yasmi

100 கோடி ரூபாய் நட்டஈடு வழங்குமாறு கோரி யஸ்மின் சூக்காவுக்கு தேசிய உளவுத்துறை பிரதானி கடிதம்

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் தேசிய உளவுத்துறை பிரதானி மேஜர் ஜெனரல் துவான் சுரேஸ் சலே 100 கோடி ரூபாய் நட்டஈடு கோரியுள்ளார்.

எதிர்வரும் 14 நாட்களுக்குள் நட்டஈடு வழங்கவில்லையென்றால், அவர் மீது வழக்குத் தொடரவுள்ளதாகவும் தேசிய உளவுத்துறை பிரதானி குறிப்பிட்டள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக லண்டனில் உள்ள யஸ்மின் சூக்காவின் முகவரிக்கும் அவரது அலுவலக தலைமையகத்தின் முகவரிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த மே மாதம் 22ஆம் திகதி தேசிய உளவுத்துறை பிரதானியாக சுரேஷ் சலே மற்றும் மேலும் நான்கு இராணுவத்தினர் பிரிகேடியர் தரத்திலிருந்து மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டமை குறித்து கடந்த ஜுன் முதலாம் திகதி யஸ்மின் சூக்கா விமர்சித்திருந்தார்.

இதன்போது, கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்படும் தென் அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியர் வரதராஜா துறைராஜன் என்பவரை சித்திரவதை செய்தமை தொடர்பாக சுரேஷ் சலே பொறுப்புக்கூற வேண்டியவர் என விமர்சித்திருந்தார்.

அத்தோடு, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய இராணுவ வீரர் ஒருவரும் சுரேஷ் சலேவின் குழுவில் பணியாற்றியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள சுரேஷ் சலே, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து, இவ்வாறு யஸ்மின் சூக்காவிடம் நட்ட ஈடு கோரியுள்ளார்.