சஞ்சீவ மெதவத்தவை இடமாற்றுமாறு பரிந்துரை

police

பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ மெதவத்தவை இடமாற்றுமாறு பரிந்துரை

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் தலைமை அதிகாரி, பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ மெதவத்தவை பொலிஸ் நலன்புரி பிரிவிற்கு இடமாற்ற பதில் பொலிஸ் மா அதிபர் பரிந்துரை செய்துள்ளார்.

வெற்றிடமாகவுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் தலைமை அதிகாரி பதவிக்கு, பிரதி பொலிஸ் மா அதிபர் G.K.J. அபோன்சுவை நியமிக்க பரிந்துரைத்துள்ளதாக தேசிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பரிந்துரைகளை ஆராய்வதற்காக நாளை மறுதினம் (02) ஆணைக்குழு கூடவுள்ளது.

இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் நால்வரும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

2 உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள், 2 சார்ஜன்களுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை, வர்த்தகர்களுக்கு விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நால்வர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

குறித்த உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்களா என்பது தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.