பாதகமான சட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!

download 25
download 25

“நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் கடந்த அரசால் நாட்டுக்குப் பாதகமாகும் வகையில் கொண்டுவரப்பட்டிருந்த அனைத்துச் சட்டங்களும் நீக்கப்படும்.”

  • இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த அரசின் காலத்தில் நாட்டுக்குப் பாதகமான பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்தச் சட்டங்களால் நாடு பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.

குறித்த சட்டங்கள் அனைத்தையும் நீக்கினால்தான் நாட்டை அபிவிருத்திப் பாதைக்குக் கொண்டுசெல்ல முடியும். பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தால் மேற்படி சட்டங்களை நாம் நீக்குவோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் இன்ப துன்பங்களை அறிந்துக்கொள்ள வீடுகளுக்கு வருவதாக கூறிய சஜித் பிரேமதாஸ, தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலேயே இடம் இல்லாது போய்விட்டது.

ஜனாதிபதித் தேர்தலின் போது தன்னை ஒரு எளிய தலைவராக சஜித் பிரேமதாஸ காட்ட முற்பட்ட போதிலும் அவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட முதலில் அவர் எதிர்க்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ இல்லத்தைப் பெற்றுக்கொண்டதும், வாகனங்களைப் பெற்றுக்கொண்டதுமாகும்” – என்றுள்ளார்.