சரணடைந்த புலிகள் குறித்து லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சர்ச்சைப் பேச்சு!

Shavendra Silva 720x400 1
Shavendra Silva 720x400 1

இறுதிப் போரில் வெள்ளைக் கொடிகளுடன் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் எவரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. அதேவேளை, விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் எவரும் அவர்களின் உறவினர்களினால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவும் இல்லை.

இறுதிப் போர்க்களத்தில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் அனைவரும் புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

2009ஆம் இறுதிப் போரின்போது அரச தரப்புக்கும் விடுதலைப்புலிகள் தரப்புக்கும் விடுதலைப்புலிகளில் சரணடைய விரும்பியவர்களைக் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவது பற்றிப் பேச்சுகள் நடைபெற்றன.

விடுதலைப்புலிகள் தரப்பில் சரணடைய விரும்புபவர்கள் வெள்ளைக்கொடிகளுடன் வந்தால் அவர்கள் பாதுகாப்புடன் நடத்தப்படுவர் என்று பேச்சுகளின்போது அரச தரப்பு உத்தரவாதமளித்தது.

அதற்கமைய தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகள் பலர் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தனர். போராளிகளின் உறவினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களும் பலர் இருந்தனர். இதற்கான சாட்சியங்களும் இருந்தன. அவ்வாறு சரணடைந்தவர்கள் தற்போது இல்லை.

அவர்களைப் பற்றிய தேடுதல்களும் கேள்விகளும் தற்போது முக்கியமானவையாகும். இந்த முக்கிய விடயம் பற்றி யாரும் பேசுவதில்லை. இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் இது தொடர்பில் தற்போது பொறுப்புடன் பதிலளிக்கவில்லை – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான மாவை சேனாதிராஜா நேற்றுமுன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கை தொடர்பில் இராணுவத் தளபதி பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்பினரும் அரசுக்கும் இராணுவத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இறுதிப்போரில் வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்கள் என்றும், உறவினர்களினால் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகள் என்றும், காணாமல்போனவர்கள் என்றும் எவரும் இல்லை. இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சகல விடுதலைப்புலிகள் உறுப்பினர்களும் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.

அதேவேளை, காணாமல்போனவர்கள் என்று தமிழர் தரப்பால் கூறப்படுவோர் போர்க்களத்தில் உயிரிழந்திருப்பார்கள். எமது இந்த நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை. உண்மைச் சம்பவத்தையே நாம் சொல்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாம் பொறுப்புடன்தான் பதிலளித்து வருகின்றோம். ஆனால், தமிழ் அரசியல்வாதிகள்தான் பொறுப்பு இல்லாமல் – இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.

குறித்த விடயம் தொடர்பில் மாவை சேனாதிராஜா அறிக்கை விட்டிருந்த நிலையில் அதற்கு இராணவத் தளபதி மீண்டும் பதிலளித்திருக்கின்றமை தென்னிலங்கையில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.