சஜித், ரணில், அநுர படுதோல்வியடைவது நிச்சயம் – ஆனந்த அளுத்கமகே

1540636453 ananda 2

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் படுதோல்வியடைவது உறுதியாகிவிட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைப்பது தற்போது உறுதியாகியுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்தார்.

கண்டியிலுள்ள தனது பிரசார அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவைப் பொதுத்தேர்தலின் பின்னர் கைப்பற்றுவோம் எனவும், பொதுத்தேர்தலின் பின் தனித்து ஆட்சியமைப்பதே தங்களது நோக்கம் எனவும் கூறியுள்ளார். உண்மையில் அவரால் இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றிபெறவே முடியாது.

நான் கடந்த 4 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்தேன். ஆனால், எமது தொகுதி ஆதரவாளர்களுக்கும், மக்களுக்கும் என்னால் ஒரு இனிப்புக்கூட வழங்கமுடியாமல்போனது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு என்றாலும் மக்களுக்கான சேவையை வழங்க முடியாமல் தள்ளாடினேன். அந்த மன உளைச்சலை அடுத்தே நான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்தேன்.

அரசிலிருந்து அனைத்து வரப்பிரசாதங்களையும் விட்டு மஹிந்த அணியில் முதலாவது இணைந்த நபர் நான்தான். எனவே, வரலாற்றில் எதிர்க்கட்சியே இல்லாத பிரதேச சபையாக கங்க இஹல பிரதேச சபை மாறியுள்ளது.

அந்தச் சபையின் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி உறுப்பினர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்துகொண்டுள்ளனர்.

இந்தநிலையில், கலக்கமடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் பொதுத்தேர்தல் தோல்வியின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து கொள்வார்கள்.

அதேபோல ஜே.வி.பியினரும் இம்முறை நடைபெறும் பொதுத் தேர்தலில் படுதோல்வியடைவார்கள் என்பது உறுதி” – என்றார்.