அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் இடைத் தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாம் : விவசாயிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

1593998097 polanaruwa 2
1593998097 polanaruwa 2

அரிசிதட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாமென பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டம் பொலன்னறுவை சிறிபுர பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற பொழுதே ஜனாதிபதியிடம் விவசாயிகள் இக்கோரிக்கையினை முன்வைத்தனர்.

அழிந்து கொண்டு வரும் அரிசி களஞ்சியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் அவற்றை மீள் புனரமைப்பு செய்வதற்கும் அரிசி கொள்வனவை சீர் படுத்துவதற்கும் நடைமுறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது விவசாயிகளிடம் தெரிவித்தார். விவசாயிகளை பாதுகாத்து பிரச்சினைகள் ஏற்படாத வகையில் எதிர்காலத்தில் செயற்பட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

இதேவேளை மத்திய வங்கி பினணமுறி மோசடிக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பொலன்னறுவை பிரதேச மக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். தொழில் பிரச்சினை மற்றும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் ஆகியன பொலன்னறுவை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகும். இந்த பிரச்சினைக்கும் தீர்வை பெற்று தருமாறு மக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை பொலன்னறுவை களுகெலே பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷ கலந்துகொண்டார். மணம்பிடிய பிரதீபா அரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கி அவர்கள் சமய வழிபாடுகளையும் மேற்கொண்டனர். பிரதீபா அரங்குக்கு வெளியில் கூடியிருந்த ஆசிரியர்கள் சிலரை சந்தித்த ஜனாதிபதி அவர்களின் மனுக்களையும் பெற்று கொண்டார். இதன் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ரொசான் ரணசிங்கவும் இணைந்திருந்தார்.

நேற்று மதியம்(சனிக்கிழமை) கதுரு வெல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார். அப்பகுதியில் உள்ள குளங்களை சுத்தம் செய்து தருமாறு அங்கு கூடியிருந்த மக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். விதை நெல் மற்றம் உர பிரச்சினை தொடர்பிலும் அவர்கள் ஜனாதிபதிடம் சுட்டிக்காட்டினர்.

கல்வெல சந்தியில் உள்ள தம்பலா பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். அங்குள்ள மக்களோடு கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி மறக்கவில்லை.