அரசுக்கு எதிராக கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

0 4

அதிக வரிச் சுமை, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, சம்பளக் குறைப்பு மற்றும் தொழில்களை இழக்கச் செய்தலுக்கு எதிர்ப்பு, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்தக் கொடுப்பனவு, அரச சேவையை இராணுவ மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ‘வெட பிமே அபி’ (வேலைத்தளங்களில் நாம்) அமைப்பினர்  மாபெரும் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

கொழும்பு, கோட்டை ரயில் நிலைய முன்றலில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் கலந்துகொண்டார்.

பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்று வெட பிமே அபி அமைப்பின் ஏற்பாட்டாளர் சின்த்தக்க பண்டார தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் இதுவரை நம்மை விட்டு அகலவில்லை. ஆயினும், தற்போது நாட்டு மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக மிகவும் துன்பப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சினையால் ஊரடங்கின்போது வீடுகளில் முடங்கியிருந்த மக்களின் வாழ்வாதாரம் இல்லாமல் போயுள்ளது. அவர்கள் தற்போது பணமின்றி உள்ளனர். தொழில் இல்லை. அரசில் வேலை செய்தவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. மேலதிக நேரக் கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியக் கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது. எமது அரசால் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு, ஓய்வூதியக் கொடுப்பனவு போன்றன  ஜனவரி மாதத்திலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களில் தொழில்புரிந்தவர்களை எதுவித காரணங்களுமின்றி வெளியேற்றியுள்ளனர்.  சுய தொழில்களைச் செய்தவர்கள் இன்று வீதியில் உள்ளனர். எந்தப் பக்கம் திரும்பினாலும் மக்கள் படும் துன்பம், மக்களின் பசி போன்றவையே கேட்கின்றது.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை முன்கொண்டு செல்ல முடியாத நிலையும் தற்போது காணப்படுகின்றது. மரத்திலிருந்து விழுந்தவனுக்கு மாடு முட்டியது போன்ற செயலையே இந்த அரசு செய்கின்றது.  எதற்கெடுத்தாலும் வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. எரிபொருளுக்கும் விரி விதிக்கப்பட்டுள்ளது. மின்சாரப் பாவனைக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. குடிதண்ணீர் பாவனைக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சிரேஷ்ட குடிமக்களின் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கும் வழங்கப்பட்ட 15 வீத வட்டி தற்போது 8 வீதமாகக் குறைத்துள்ளது.

ஆகவே, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் எரிபொருள் மீதான வரியைக் குறைப்போம். ஏனெனில், நல்லாட்சி அரசின்போதும், நான்தான் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக இருந்தேன். 12 நாட்களுக்குள் எரிபொருட்களில் விலையைக் குறைத்தேன். அதுபோன்று ராஜபக்சக்கள் விதிக்கின்ற எரிபொருட்கள் மீதான அதிக வரியை இல்லாமல் செய்வோம். மேலும், குடிதண்ணீர் பாவனை மற்றும் மின்சாரப் பாவனை போன்றவற்றுக்கு நிவாரணங்களை அளிப்போம்.  எந்தவித குறைப்புமின்றி அரச சேவையாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம், ஓய்வூதியக்காரர்களுக்கு அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவையும் வழங்குவோம்.

எந்தவொரு ஊழியர்களையும் தொழிலிருந்து விரட்டியடிக்கப்பட விடமாட்டோம். கொரோனா வைரஸ் பிரச்சினையால், வாழ்வாதாரம் இழந்த அனைவரினதும் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும் வரையில் மாதாந்தம் ரூபா 20 ஆயிரம் வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம” – என்றார்.