தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை

1 45
1 45

எந்தவோர் அரசாங்க அல்லது மாகாண சபை அலுவலகத்தில் அல்லது அரசாங்க பாடசாலையில், உள்ளூர் அதிகாரசபையில், வேறு அரச கூட்டுத்தாபனங்கள் அல்லது நியதிச்சட்ட சபைகள் வசமுள்ள நிறுவனமொன்றில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பாக வாக்குகளை சேகரித்தல், துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்தளித்தல் அல்லது வேறு கருமங்களை மேற்கொள்ளல் அல்லது கூட்டங்களை நடாத்துதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனவே அவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுதல் அத்தியாவசியமானது என அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இவ்வாறான சட்டவிரோதமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்காதிருத்தல் குறித்த அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களதும் உப அலுவலகங்களின் தலைவர்களினதும் பொறுப்பாகும்.

தேர்தல் காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு அல்லது அரசாங்க கூட்டுத்தாபனங்களுக்கு அல்லது நியதிச்சட்ட சபைகளுக்கு சொந்தமான யாதேனும் அசையும் அல்லது அசையா ஆதனங்கள் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்களை ஊக்கப்படுத்துவதற்கு அன்றேல் பாதிப்பை ஏற்படுத்துவற்குக் காரணமாக அமையக்கூடிய விதத்தில் அல்லது சுதந்திரமானதும் நீதியானதுமான ஒரு தேர்தலை நடாத்தும் கருமத்திற்கு இடையூறை ஏற்படுத்துகின்றவாறு பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான பணிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.