சம்பள அதிகரிப்பை விட பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்து,வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் ;சஜித்

0175297bf959b4d786beb14a4443eeef XL
0175297bf959b4d786beb14a4443eeef XL

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் கூலியை அதிகரிக்க விடாமல் செய்தமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் அப்போதைய பிரதமர் ரணிலுமே பொறுப்புக் கூறவேண்டுமென, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

ஊடகப் பிரதானிகளைக் கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று (திங்கட்கிழமை) (13) காலை சந்தித்துக் கலந்துரையாடும்போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நீங்கள் அமைச்சராக இருந்தபோது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 50 ரூபாய் சம்பள அதிகரிப்பை அமைச்சரவையில் பெற்றுக்கொடுக்க முடிந்திருக்கவில்லை.  அப்படியிருக்கையில் என்ன அடிப்படையில் 1,500 ரூபாய் நாள் கூலி வழங்குவேன் என உறுதியளித்தீர்கள்?” எனக் கேட்கப்பட்டபோது,

“அப்போதைய அமைச்சரவையில் நானும், அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், ராஜித சேனாரத்ன போன்றவர்களுமே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்திச் சண்டை பிடித்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமான அச்சம்பள அதிகரிப்புச் சாத்தியப்படவில்லை.

இதனைப் பெற்றுக்கொடுப்பதில் முட்டுக்கட்டையாகச் செயற்பட்டவர்கள் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்தான். அவர்கள்தான் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

“என்னைப் பொறுத்தவரையில் சம்பள அதிகரிப்பு ஆயிரமா, ஆயிரத்தி ஐநூறா என்பதல்ல முக்கியம். பெருந்தோட்ட மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்து, தோட்டத்துறையை மேம்படுத்துவதனூடாகவே அங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.

அந்நிலையை உருவாக்கினால், 1,500 ரூபாய் சம்பளம் என்பதே தேவைப்படாது. அனைவரும் பொருளாதாரத் திருப்தியுள்ளவர்களாக மாறிவிடுவார்கள்” என, சஜித் பிரேமதாஸ மேலும் கூறினார்.