ஒரு இலட்சம் முகக் கவசங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய சீனா

f87836e4 c05b 4715 8a89 b71567ce0d0a 1.e7059a07c61037e1302ba6c4ce22404c

இலங்கையில் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து கல்வியமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சு ஆகியவற்றுடனான ஒருங்கிணைவில் நாடளாவிய ரீதியிலுள்ள 26 பாடசாலைகளுக்கும் 5 பல்கலைக்கழகங்களுக்கும் 189,000 முகக்கவசங்களையும் இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் வழங்கி வைத்திருக்கிறது.

அது மாத்திரமன்றி பொதுத்தேர்தலைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வேண்டுகோளின் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 100,000 முகக்கவசங்களை வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் சீனத்தூதரகம் அறிவித்திருக்கிறது.

ஒற்றுமையே பலமாகும். சீனாவும் இலங்கையும் அனைத்தையும் பகிர்ந்துகொள்ளும் உண்மையான நட்புறவு நாடுகளாகும். இலங்கையினால் காண்பிக்கப்படும் வலுவான ஒருமைப்பாடு மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றைச் சீன அரசாங்கமும், 1.4 பில்லியன் மக்களும் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

இலங்கையில் கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து கடந்த ஜுன் மாதம் வரையில் சீனாவின் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள், வணிக நிறுவனங்கள், வேறு அமைப்புக்கள் எனப்பலரால் சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று இது குறித்து சீனாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கிய மார்ச் மாத இறுதிப் பகுதியிலிருந்து ஜுன் மாதம் வரையில் சீனாவினால் இலங்கைக்கு 73,000 இற்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை உபகரணங்கள், 3, 144,000 சத்திர சிகிச்சை முகக்கவசங்கள், 210,000 கே.என் 95 முகக்கவசங்கள், 54,000 பாதுகாப்பு அங்கிகள், 41,000 பாதுகாப்புக் கண்ணாடிகள், 145,000 கையுறைகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

சீன மக்களால் வழங்கப்பட்ட இந்த நன்கொடைகள் இலங்கையர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் உதவியாக அமைந்திருக்கும் என்று உறுதியாக நம்புவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று நட்புறவை வலுப்படுத்துவதற்கும் பங்களிப்புச் செய்திருக்கும்’ என்றும் சீனத்தூதரக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.