பத்தில் ஒன்றாக எம்மை நினைக்க வேண்டாம் நாம் அதில் இருந்து வேறுபட்டவர்களாக இருப்போம்;டக்ளஸ்

3820e6a49232e65f678928ba5e4885f4 XL
3820e6a49232e65f678928ba5e4885f4 XL

கடந்த காலத்தில் தமிழ் மக்களை ஏமாற்றியவர்களைப் போல் தன்னையும் பத்தில் ஒன்றாக கருத வேண்டாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா மெனிக்பாம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “தேர்தல் காலத்தில் மக்களாகிய உங்களுடைய வாக்குகளை அபகரிப்பதற்காக பலர் வருவார்கள். வாக்குகளை அபகரிப்பதுதான் அவர்களின் நோக்கம். நாங்கள் எதைச் சொல்லுகின்றோமோ அதைச் செய்கின்றவர்கள். செய்கின்றதையே சொல்லுகின்றவர்கள். அந்தவகையில் நீண்ட காலத்திற்குப் பிறகு நான் இங்கு வந்திருக்கிறேன்.

1977ஆம் ஆண்டு இனக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களை தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக மெனிக்பாம் மற்றும் டொலர்பாமில் மீள்குடியேற்றம் செய்திருந்தோம். அதன்பின்னர் மீண்டும் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது இளம் சமுதாயத்தினர் மீண்டும் குடியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்துள்ளேன். அந்தவகையில் இனிவரும் காலங்களில் நீங்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு காண்போம்.

கடந்த காலத்தில் பலருக்கு வாக்களித்திருப்பீர்கள். அதன்மூலம் பலத்த ஏமாற்றம் உங்களுக்கு இருந்திருக்கும். பத்தில் ஒன்றாக எம்மை நினைக்க வேண்டாம். நாம் அதில் இருந்து வேறுபட்டவர்களாக மக்களின் பிரச்சினையை தீர்க்கின்ற வகையில் அணுகுவதுதான் எமது வரலாறு.

நீங்கள் எங்களை நம்புங்கள், அணிதிரளுங்கள்! அதன்மூலமாக நாங்கள் உங்களை பாதுகாத்து கௌரவமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வோம்” என்று தெரிவித்தார்.