வேலைவாய்ப்பை வழங்குவேன் என தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர் வெற்றிபெற்றாலும் பதவியை இழப்பார்

suma
suma

வேலைவாய்ப்பை வழங்குவேன் என  தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர் ஒருவர், வெற்றிபெற்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மாயாஜாலம்களைக் காண்பித்து அவர் வெற்றிபெற முயற்சிக்கின்றார். அவ்வாறு அவர் தேர்தலில் வெற்றிபெற்றாலும் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்ற பரப்புரைக் கூட்டம் தெல்லிப்பழை ராஜேஸ்வரி மண்டபத்தில் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற்றது.

இதில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வேலைவாய்ப்பு வழங்குவேன் என்று வேட்பாளர் ஒருவர் இளையோர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்கிறார். அவ்வாறு வேலைவாய்ப்பை வழங்க முடியாது.

இந்த நடவடிக்கை தேர்தல் விதிமுறை மீறலாகும். அந்த வேட்பாளரால் பல தேர்தல் விதிமுறை மீறல்கள் செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பில் பல முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அவர் பல மாயாஜாலங்களைச் செய்து தேர்தலில் வெற்றிபெற்றாலும் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழப்பார்” என குறிப்பிட்டார்.