இலங்கை தேர்தலில் கொரோனா ஏற்படுத்திய பல மாற்றங்கள்

Virus doodles reduced 3
Virus doodles reduced 3


இலங்கை அரசியல் வரலாற்றிலே பொதுத்தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டு – அத்தினத்தில் வாக்களிப்பு நடைபெறாமல் இரண்டு தடவைகள் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இம்முறை பதிவானது.

கொரோனா’ வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டது.

8 ஆவது நாடாளுமன்றத்தின் பதவிகாலம் ஆகஸ்ட் மாதம்வரை இருந்தாலும், நான்கரை வருடங்களில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கான அறிவித்தல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த மார்ச் 2 ஆம் திகதி வெளியிட்டார்.

இதன்படி ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும்,  நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் மே 14 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பின்னர், கொரோனா வைரஸ் தாக்கத்தால் திகதி குறிப்பிடாமல் தேர்தலை, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஒத்திவைத்தார்.

அதன்பின்னர் திகதி குறிப்பிடப்பட்டிருந்தாலும் இரண்டாவது முறையும் தேர்தல் பிற்போடப்பட்டது. இந்நிலையிலேயே கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் 5 ஆம் திகதி தேர்தலை நடத்தும் முடிவை ஆணைக்குழு எடுத்தது.

இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் (சனப் பிரதிநிதிகள் சபை) 1947 ஆகஸ்ட் 23 முதல் 1947 செப்டம்பர் 20 வரை 19 நாட்கள் நடைபெற்றது.

அதன்பின்னர் 1952, 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது தேர்தல் திகதியாக மூன்றிற்கும் மேற்பட்ட நாட்கள் அறிவிக்கப்பட்டுவந்த நிலையில் 1960 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதே ஒரே நாளில் வாக்களிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதேவேளை, 1965, 1970, 1977, 1989, 1994, 2000,2001, 2004, 2010, 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களும் திட்டமிட்ட அடிப்படையில் நடைபெற்றது.

தெற்கு கிளர்ச்சி, உள்நாட்டுப்போர் ஆகியவற்றுக்கு மத்தியிலும் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல்கள் நடைபெற்றன.(வாக்களிப்பு வீதம் குறைவாக இருந்தாலும் தேர்தல் பணி இடம்பெற்றது.)

ஆனால், இலங்கையில் முதலாவது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு இற்றைக்கு 73 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், குறித்தொகுக்கப்பட்ட தினத்தில் தேர்தலை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல வழமையாக பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான கையோடு தேர்தல் களமும் சூடுபிடித்து அனல்கக்க ஆரம்பிக்கும். ஆனால், கொரோனா வைரஸ் தாண்டவத்தால் இம்முறை எதிர்ப்பார்த்தளவு தேர்தல் திருவிழா களைகட்டவில்லை. பிரமாண்ட கூட்டங்களை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்தலொன்றில் சுகாதார பரிசோதகர்கள் நேரடியாக தொடர்புபடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

வழமையாக வாக்களிப்பு முடியும் தினத்தன்றே வாக்கெண்ணும் பணியும் ஆரம்பமாகும். ஆனால், இம்முறை மறுநாளே அப்பணி இடம்பெறவுள்ளது.   வாக்களிப்பு நேரமும் ஒரு மணி நேரத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. புள்ளடி இடுவதற்கு பேனை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கை தேர்தலில் கொரோனா பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது