வயற்காணித் சுத்தப்படுத்தலை தடுத்து இராணுவத்தினர் அடாவடி..!

3a8108ae 2a35 4e86 ac17 f6c2ea97c0f8

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை பகுதியிலுள்ள கறுப்பட்ட முறிப்பு, எருக்கலம்பிலவு மற்றும், நெடுங்கேணி கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட தனிக்கல்லு ஆகிய வயற்காணிகளை, பெரும்போக நெற்செய்கைக்காக விவசாயிகள் சுத்தம் செய்யும்போது, இராணுவத்தினர் குறித்த வயற்காணிகளைத் சுத்தம் செய்வதைத்  தடுத்துள்ளனர். 

இராணுவத்தினுடைய குறித்த அடாவடிச் செயற்பாட்டினை, விவசாயிகள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் குறித்த இடத்திற்கு நேரில் சென்று நிலைமை ஆராய்ந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலைப் பகுதியில், கறுப்பட்ட முறிப்பு குளத்தின் கீழ் உள்ள சுமார் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களிலும், எருக்கலம்பிலவிலுள்ள 350ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களிலும், அதேவேளை வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட தனிக்கல்லு குளத்தின் கீழுள்ள 350 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களிலும் அங்குள்ள தமிழ் விவசாயிகள் பன்நெடுங் காலமாக நெற்பயிற்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு கடந்த கால அசாதாரண நிலைகள் காரணமாக, குறித்த பயிர்ச் செய்கை நிலங்களில், சில காலங்கள் பயிற்செய்கை நடவடிக்கைகள் இடம்பெறாத காரணத்தினால், அவ்வயல் நிலங்களில் ஒரு பகுதி சிறிய பற்றைக் காடுகளாக காணப்படுவதுடன், மறுபகுதி காணிகளில் அங்குள்ள தமிழ் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட  காலத்திலிருந்தே விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றையநாள் குறித்த வயல் நிலங்களில் பெரும்போக நெற்செய்கைக்கான பண்படுத்தல் மற்றும், பற்றைக் காடுகளாக உள்ள பகுதிகளைத் துப்பரவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அக்காணிகளுக்குரிய விவசாயிகள் ஈடுபட்டிருந்நனர். அப்போது அங்கு வந்த இராணுவத்தினர், குறித்த பகுதியில் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாதெனத் தடுத்திருந்தனர்.

இது தொடர்பில் அப்பகுதி விவசாயிகளால் தெரியப்படுத்தப்பட்டதற்கமைய, குறித்த இடத்திற்கு வருகைதந்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் நிலைமைகளை ஆராய்ந்தார்.

விவசாயிகளிடம் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் இருப்பின், அனுமதிப் பத்திரங்களின் பிரதிகளை தம்மிடம் ஒப்படைத்துவிட்டு குறித்த காணிகளில் துப்பரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்தினர் ரவிகரன் அவர்களிடம் தெரிவித்திருந்தனர்.