சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களிக்க தயாராகுமாறு வேண்டுகோள்

Ga Kili 1
Ga Kili 1

தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களிக்க தயாராகுமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 92260 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். அவர்களிற்கான வாக்களிப்பு நிலையங்களாக 107 வாக்களிப்பு நிலையங்கள் அவ்வந்த பிரதேசங்களில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு 14 வாக்கெண்ணல் நிலையங்கள் பழைய மாவட்ட செயலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் சட்டம் மற்றும் சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கி அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைவாக அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் நேற்றும் இன்றும் தொற்று நீக்கம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இம்முறை தேர்தலில் வழக்கமாக தேர்தல் உத்தியோகத்தில் ஈடுபடுகின்றவர்களிற்கு மேலதிகமாக சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களும் ஈடுபடுகின்றார்கள். அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களிலும் பயிற்றுவிக்கப்பட்ட சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். உரிய சுகாதார முறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை அனைத்து வாக்கெடுப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களிலும் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுவாக வாக்கெடுப்பு தினத்தன்றே வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறுவது வழக்கம். இம்முறை கொவிட் 19 காரணமாக ஒருநாள் பிற்போடப்பட்டு 6ம் திகதியே வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்தவகையில் வாக்கு பெட்டிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். ஒவ்வொரு கட்சி சார்பாகவும் இருவர் அங்கு தங்கி நிற்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உத்தியோகத்தர்கள், பொலிசார் ஆகியோரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பெட்டிகளை பாதுகாக்கும் நடைமுறைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இரணைதீவில் உள்ள மக்கள் வாக்களிப்பதற்கு அவர்கள் கடல் கடந்து வரவேண்டிய தேவை இருக்கின்றது. அவர்களிற்கான போக்குவரத்து வசதிகளை பிரதேச செயலகம் ஊடாக மேற்கொண்டு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

சுகாதார பாதுகாப்பு முறை தொடர்பில் மக்களை விழிப்பூட்டி வருகின்றோம். ஆயினும் இந்த சந்தர்ப்பத்தில் வாக்களிக்க வருகின்ற மக்கள் எவ்வாறான சுகாதார முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை குறிப்பிடுவது பொருத்தமானதாகும். அனைவரும் அறிந்த வகையில் மூன்று விடயங்களை நாங்கள் கைக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

வாக்களிப்பு நிலையங்களில் ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேண வேண்டிய அவசியம் இருக்கின்றது. அதேவேளை முக கவசத்தை அவர்கள் எப்பொழுதும் அணி்தவர்களாக இருக்க வேண்டுமென்பதுடன் கைகளை கழுவிய பின்னரே உள்நுழைய வேண்டும் என்பது அடிப்படையான விடயங்களாகும்.

முக கவசம் அணிந்திருந்தாலும் அடையாளப்படுத்துவதற்காக தமது முகத்தை காண்பிக்க வேண்டிய அவசியமும் இருக்கின்றது. அந்த வகையில் அவர்கள் சரியான முறையில் தமது ஆள்அடையாளத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும். 
இந்த காலப்பகுதியில் ஆள் அடையாள அட்டையானது கைகளினால் வாங்கி பரிசோதிக்கப்படமாட்டாது. ஆகவே அவர்கள் உரிய விதத்திலே அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அத்தோடு வாக்கட்டையையும் அவ்வாறே காண்பிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அத்தோடு வருகை தரும்போது கறுப்பு அல்லது நீல நிற மை பேனாவை கொண்டு வருவது சிறப்பானது என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்