விரிவான திட்டம் அவசியம் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த: கரு ஜயசூரிய!

download 16
download 16

அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பை நாட்டு மக்கள் வழங்கிய ஆணையின் ஊடாக அரசாங்கம் பெற்றுக்கொண்டிருக்கிறது.

எனினும் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய விரிவானதொரு கலந்துரையாடல் செயன்முறையைப் பின்பற்றுவதன் ஊடாகவே அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

2020 ஆகஸ்ட் 5 பொதுத்தேர்தலில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கான ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள்.

பொதுத்தேர்தல் பிரசாரக்கூட்டங்களின் போது, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மாற்றியமைப்பதற்காகத் தமக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத்தருமாறு பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் பலரும் பகிரங்கமாகவே வலியுறுத்தியிருந்தனர்.

தற்போது அரசாங்கம் முன்னர் எதிர்பார்த்ததைப் போன்றே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்களின் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயகத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்த அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்படுமா அல்லது மாற்றியமைக்கப்படுமா என்றவாறான கரிசனைகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையிலேயே முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நாட்டுமக்களால் வழங்கப்பட்டிருக்கும் ஆணை, அரசியலமைப்பில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கும் புதிய வரைபுகளைக் கொண்டு வருவதற்கும் அரசாங்கத்திற்கு வாய்ப்பை வழங்குகின்றது.

எனினும் அவ்வாறு ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு இதனுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துக்கொண்டு செயற்படுவது மிகவும் அவசியமாகும்.

எனவே அரசியலமைப்புத்திருத்த செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் அதற்காக விரிவானதொரு கலந்துரையாடல் செயன்முறை பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.