கூட்டமைப்பின் கோட்டை எம் வசம்:பிரதமர்!

30 1
30 1


– பெருமிதமடைகின்றார் மஹிந்தர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கைப்பற்றிவிட்டோம். கூட்டமைப்மைவிட அதிக ஆசனங்களைப் பெற்றுத் தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமராக நான்காவது தடவையாகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்‌ஷ அலரி மாளிகையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 9 ஆசனங்களை மட்டும் பெற்றுள்ளது. ஆனால், அங்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் அதன் பங்காளிக் கட்சிகளும் இணைந்து 11 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.

அதாவது யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தலா 2 ஆசனங்கள் வீதம் 6 ஆசனங்களையும், அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் 4 ஆசனங்களையும், திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் ஓர் ஆசனத்தையும் நாம் இலகுவாகக் கைப்பற்றியுள்ளோம்.

மட்டக்களப்பில் பிள்ளையான் சிறைக்குள் இருந்துகொண்டே அம்மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார் என்பது விசேட அம்சமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையை நாம் கைப்பற்றியதன் ஊடாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம் என்பது நிரூபணமாகியுள்ளது.  

கூட்டமைப்பினர் மீது தமிழ் மக்கள் கடும் அதிருப்தி கொண்டுள்ளனர். அவர்கள் எம்மை நம்புகின்றனர். எனவே, அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எமது ஆட்சியில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்போம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இனியாவது திருந்த வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் நீரோட்டத்தில் இருக்காமல் நாட்டினதும் மக்களினதும் நலன்களைக் கருத்தில்கொண்டு அவர்கள் செயற்பட வேண்டும்” – என தெரிவித்துள்ளார்.