போர்க்குற்றச்சாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது:சரத் வீரசேகர!

download 19
download 19

“இறுதிப்போரில் நாம் செய்யாத குற்றமொன்றை செய்ததாகக் கூறி முன்னைய நல்லாட்சியாளர்கள் ஜெனிவாவில் போர்க்குற்றச்சாட்டுகள் என்ற பொய்யான சாட்சியங்களை முன்வைத்தனர். அவற்றை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்த அழுத்தங்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் எந்தவொரு நாட்டுக்கும் இல்லை. ஆனால், நல்லாட்சி அரசு தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலமாக வலுக்கட்டாயமான தலையீடுகள் ஏற்பட்டன.

எமது இராணுவத்தை சர்வதேச அரங்கில் தண்டிக்கும் நிலைமைக்குக் கொண்டு சென்றனர். அவர்களின் ஆட்சி தொடர்ந்திருந்தால் இன்று எமது இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு சென்றிருக்க முடியாது. இராணுவத்தைக் கைது செய்து சிறையில் அடைக்கும் நிலைமையே உருவாகியிருக்கும்.

தமிழீழ விடுதலை புலி பயங்கரவாதிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்து நாட்டில் இராணுவத்தின் கரங்களைக் கட்டிப்போட்டுவிட்டு விடுதலைப்புலிகளையும், கடற்புலிகளையும் சுதந்திரமாக செயற்பட வைத்தவர்கள் மீண்டும் 2015இல் ஆட்சிக்கு வந்தவுடனும் அதே புலிப் புராணத்தையே பாட ஆரம்பித்தனர்.

இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டே நாம் மக்களை ஒன்றிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தோம்.

சிங்கள பெளத்த நாட்டில் பெளத்த சிங்களத்தை அழிப்பதை எம்மால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இன்று நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம்; அதிகாரங்கள் எமக்கு கிடைத்துள்ளன. இப்போது நாம் நாட்டின் சிங்கள பெளத்த கொள்கையைப் பாதுகாப்போம். அதேபோல் எமது இராணுவத்தைப் பாதுகாக்கும் சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்” – என தெரிவித்துள்ளார்.