சட்டம் இறுதி குற்றவாளிவரை நடைமுறைப் படுத்தப்படும்:எம்.பி அலி சப்ரி!

ali sabry
ali sabry

“நாட்டில் நீதித்துறை அமைச்சராக நான் பதவியேற்றிருப்பது குறித்தவொரு சமூகத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அல்ல” என்று தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ள இறுதி குற்றவாளிவரை அனைவருக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” என்றும் உறுதியளித்துள்ளார்.

நீதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் அவருக்காக கண்டியில் வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,   

“நாட்டில் நீதித்துறை அமைச்சராக நான் பதவியேற்றிருப்பது குறித்தவொரு சமூகத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அல்ல. நாட்டுக்காகவே நாம் நியமிக்கப்பட்டிருக்கின்றோம். நாட்டுக்கு எதிராகவோ அல்லது நாட்டில் நிலவுகின்ற அமைதிக்கு எதிராகவோ எம்மால் எந்த தவறும் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

சிலர் நாட்டில் மக்களை பாகுபடுத்தி பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்து , கத்தோலிக்க , முஸ்லிம் மற்றும் பௌத்த மக்கள் ஒன்றிணைய முன்வரும் போது சிலர் பணத்தை செலவிட்டு கூட அந்த ஒற்றுமையை சீர்குழைக்க முயற்சிக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் அநாவசியமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

முஸ்லிம் சமூகத்திற்குள் அடிப்படைவாதிகளை இல்லாதொழிப்பதற்கான தேவை வேறு யாருக்கும் இல்லை. அதற்கான காரணம் அந்த அடிப்படைவாதிகளும் பயங்கரவாதிகளும் இருக்கும் வரையில் எம்மால் சுதந்திரமாக வாழ முடியாது. எனவே நாம் முழுமையாக பாடுபடுவோம்.

எவரேனும் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்தால் அதன் இறுதி குற்றவாளிவரை சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளிக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.