வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டங்கள் விரிவுபடுத்தப்படவுள்ளது

srilankan airlines

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டங்கள் விரிவுபடுத்தப்படவுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளர் அட்மிரால் ஜயனாத் கொலம்பபே இதனைத் தெரிவித்துள்ளார்.

94 நாடுகளில் இருந்து 20 ஆயிரத்து 850 இலங்கையர்கள் இதுவரையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் மத்திய கிழக்கு மற்றும் மாலைத்தீவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆபிரிக்க நாடுகளில் வாழும் பெருமளவான இலங்கையர்கள் தங்களை நாட்டிற்கு அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அவர்களை அழைத்து வருவதற்கும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு அழைக்குமாறு கோரி இதுவரையில் 50 ஆயிரம் இலங்கையர்கள் விண்ணப்பித்து காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.