தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் ; ஆறு. திருமுருகன்

thiru

“நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் பகையை வளர்த்துக்கொள்ளாமல் பண்பினால் ஒன்றுபட்டு எந்த மக்கள் வாக்களித்தார்களே அந்த மக்களுக்கு ஒன்றுமையாகச் சேவை செய்வதற்கு அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும்.” என்று அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவரும் துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவருமான கலாநிதி ஆறு. திருமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றுகூட்டி ஒற்றுமையாகச் செயற்படுவதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்யவுள்ளதாகவும், இந்த அழைப்புக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக மக்களுக்கு உதவுகின்ற நற்பணிக்காக ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும் என்று மிகவும் அன்பாகப் பொதுமக்கள் சார்பில் வேண்டுகின்றேன்.

குறிப்பாக பழைய பகைமைகளை வளர்த்துக்கொள்வதால் பயனில்லை. இன்று மக்கள் நன்மை கருதி எதிர்கால நல்விருத்தி கருதி ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய தேவை இன்று எமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. எனவே, பகையை வளர்த்துக்கொள்ளாமல் பண்பினால் ஒன்றுபட்டு எந்த மக்கள் எமக்கு வாக்களித்தார்களே அந்த மக்களுக்கு ஒன்றுமையாகச் சேவை செய்வதற்கு அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

இதற்காக விரைவில் யாழ்ப்பாணம் பொது நிறுவனம் இருக்கின்ற நல்லை ஆதீனம் போன்ற இடங்களில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றுகூட்டி ஒற்றுமையாகச் செயற்படுவதற்குக் கோருவதற்குக்  காத்திருக்கின்றோம்.

இந்த இடத்தில் நான் பெரியவன் நீ பெரியவன் என்று பேதமைகொள்ளாமல் மக்களின் நன்மை கருதி ஒன்றுபட்டு நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து அரசுடன் சிறந்த பேச்சுக்களை நடத்திப் பகையை வளர்த்துக்கொள்ளாது ஜதார்த்ததுக்குப் பொருத்தமான செயல்களைச் செய்வது அனைவரினதும் கடமையாகும்.

இலங்கையிலுள்ள தற்போதைய அரசு பெரும் வெற்றியைச் சந்தித்துள்ளது. எனவே, இலங்கையில் பெரு வெற்றியைச் சந்தித்தித்த இந்த அரசுடன் நல்ல முறையில் சந்தோசத்துடன் மக்களின் குறைகளை எடுத்துக்கூறியும் எங்களின் நீண்டகாலப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கவேண்டி எல்லோரும் ஒருமித்த குரலில் வேண்டி மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்கவேண்டியதுதான் சாலப்பொருத்தம்.

கட்சி முரண்பாடுகள், கருத்து முரண்பாடுகள் என எல்லாவற்றையும் ஒரு கரையில் தூக்கி வைத்து விட்டு நடைமுறைக்குப் பொருத்தமான மக்களை நல்வழிப்படுத்துவதற்கான முயற்சியை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்க வேண்டும். எதிர்வாதங்களினால் எந்தவித நன்மைகளையும் அடையமுடியாது.
எனவே, ஆட்சியில் இருக்கின்ற அரசுடன் நட்பு ரீதியாக சில விடயங்களைப் பேசித் தீர்க்க வேண்டும்.

அதேவேளை, எங்கள் மக்களுக்கு இருக்கின்ற உண்மையான குறைபாடுகளை எடுத்துரைத்து நல்ல எதிர்காலத்தைக்  கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். இன்று வடக்கில் என்றால் என்ன மலையகத்திலோ அல்லது தென்னிலங்கையிலோ வாழுகின்ற தமிழர்கள் சமாதானத்தையே வேண்டுகின்றார்கள். சமாதானமான சூழலை அனைவரும் சேர்ந்து தோற்றுவிக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.

எனவே, அந்த நல்ல சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். எனவே, சான்றோர் பெருமக்கள், ஆத்மீகத் தலைவர்கள் இத்தகைய அழைப்பை ஏற்படுத்துகின்றபோது அநேகர் பாரபட்சம் இன்றி ஒன்றுகூட்டி நல்ல முடிவை எடுப்பதற்கு ஆயத்தமாகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” – என்றார்.