பொங்கல் திருநாளில் வளங்களும், நலங்களும் கிடைக்கப்பெற வேண்டும் – மாநகர முதல்வர் சரவணபவன்

saravanapawan
saravanapawan

பொங்கல் திருநாளில் நமது வாழ்க்கையில் வளங்களும், நலங்களும், மகிழ்ச்சியும், வளர்ச்சியும் கிடைக்கப்பெற வேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில்,

“தைப்பொங்கல் தமிழ் சமூகத்தின் பண்பாடு, நாகரிகத்தின் உயர் மதிப்பீடுகளை வெளிப்படுத்தும் கொண்டாட்டமாகும். அது எங்களுக்கு ஏராளமான அறுவடையைத் தருதற்குத் துணைசெய்த சூரியனுக்கு நன்றி சொல்லுகின்ற புனிதமான நாளாகும்.

பொதுவாக தை தீர்வுகளின் மாதம் ஆகும். அதனால் தான் தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் கூறினார்கள். அதற்கேற்ற வகையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும், சிக்கல்களுக்கும் இந்த தைத்திருநாள் தீர்வுகளை வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் மழை வெள்ளப் பெருக்கினால் விவசாய செய்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்புகளிலிருந்து எமது விவசாயிகள் மீண்டு வரவேண்டும். அதற்கேற்ற அமோக விளைச்சலை இந்த தை திருநாள் உவகையுடன் வழங்க வேண்டும் என சூரிய பகவானை வேண்டிக் கொள்கிறேன்.

தை பிறக்கும் நாளில் நமது வாழ்விலும் புதிய வழிகள் பிறக்கும் அவை மலர்ச்சியை அளிக்கும் என்று கூறி அனைவருக்கும் மீண்டும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.