மட்டக்களப்பில் (04) ஆசனங்கள் என்பது பகல் கனவு!

batti
batti

“இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் (04) ஆசனங்களைப் பெறுவோம் எனப் பகல் கனவு கண்டு கொக்கரிக்கின்றது. அது ஒருநாளும் நடக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தமிழ் மக்களை சுயகௌரவத்துடன் வாழவைக்க வேண்டும் எண்ணம் துளியளவும் இல்லை.”

  • இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மட்டக்களப்பு மாவட்டத்தின் புள்ளிவிபரத்தரவுகள் தெரியாத அரசியல்வாதிகளை மட்டக்களப்பு மக்கள் வாக்களித்து தெரிவு செய்திருக்கின்றார்கள் என்பது கவலையளிக்கின்றது. இவ்வாறான தவறுகளை தமிழ் மக்கள் இனியும் விடக் கூடாது. இப்போது தேர்தல் காலமாகும். இத் தேர்தலுக்கு தமிழ் மக்களின் இல்லங்களை நாடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஆதரவாளர்கள் (05) ஆண்டுகள் கடந்து மீண்டும் உங்களிடம் வாக்குச் சேகரிக்க வருவார்கள்.

இதனைத் தமிழ் மக்கள் யதார்த்தமாக உணர்ந்து செயற்பட வேண்டும். இதனை உணராவிட்டால் தமிழ் பிரதேச அபிவிருத்திகள், பட்டம் பெற்ற பட்டதாரிகள், படித்த இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு போன்ற பல விடயங்களை மாற்றுச் சமூகம் அனுபவிப்பதை தமிழ் மக்கள் பார்த்து கொட்டாவி விடக்கூடாது.

இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் (04) ஆசனங்களைப் பெறுவோம் எனப் பகல் கனவு கண்டு கொக்கரிக்கின்றது.

அது ஒருநாளும் நடக்காது. வெற்றுக்கோஷத்தையும், உணர்ச்சி ஊட்டும் செயற்பாட்டை செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலி தாரக மந்திரங்களை தமிழ் மக்கள் உணர்ந்து விட்டார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கரங்களைப் பலப்படுத்துவார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும்” – என்று கூறுயுள்ளார்.