சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள்: நிறைந்த மக்கள் அரங்கில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் விக்கி!

TMTK manifesto release 1 e1595749910406
TMTK manifesto release 1 e1595749910406

இலங்கையில் தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கும் ஒட்டுமொத்தமான ஒரு இனப்படுகொலையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் முரண்பாடுகளைக் களையும் விதத்திலும் ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை (Referendum) வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்துமாறு சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிடம் கோருவதாக நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நீதியரசர் விக்னேஸ்வரனினால் வெளியிட்டுக்கு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெரும் எண்ணைக்கையில் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

“வடகிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களிலும் வாழ்ந்து வந்த இலங்கையின் தமிழ் சமூகமானது இடைக்கற்காலம், பெருங்கற்கால மக்களின் ஒன்று கலப்பில் இருந்து தோன்றியவர்கள். இடைக்கற்கால கலாசாரமானது கிறிஸ்துவுக்கு முன் 28000 வருடகால நீண்ட இருப்பைக் கொண்டது ” என்று ஆரம்பிக்கும் இலங்கையில் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றை ஆதார தகவல்களுடன் வெளிப்படுத்தும் ஒரு அறிமுக குறிப்புடன் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் ஆரம்பிக்கிறது. இந்த அறிமுக குறிப்பினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற சரித்திரப் பேராசிரியர் மற்றும் யாழ் பல்கலைக்கழக வேந்தர் பத்மநாதன் வழங்கியிருக்கிறார். இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றின் முக்கிய சம்பவங்களை குறிப்பிடும் நீண்ட ஒரு வரலாற்று குறிப்பும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் ஒரு தேசம், இலங்கையின் வடக்கு கிழக்கு அவர்களின் மரபுவழி தாயகம், பராதீனப்படுத்த முடியாத சுயநிர்ணய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பவற்றின் அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் இறைமையுடனான உயர்ந்த மட்ட சுயாட்சியை சமஷ்டி அடிப்படையில் பெற்றுக்கொள்வதே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நோக்கம் என்றும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றபோது இருக்கக்கூடிய பல தெரிவுகளில் இந்த சமஷ்டி தீர்வும் ஒரு தெரிவாக இருக்கும் என்றும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, சர்வஜன வாக்ககெடுப்பு ஒன்றின் மூலம் இறுதி தீர்வை எட்டும்வரை யுத்தத்தினால் அழிவடைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களை மீள கட்டியெழுப்புவதற்காக ஒரு இடைக்கால தீர்வினை சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையுடன் ஏற்படுத்துவதற்கு அரசியல், ராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் குறிப்பாக முன்னைய சமாதான பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்கிய இணைத்தலைமை நாடுகள் ஆகியவை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வைப்பெற ஆராயும் விதத்தில் சர்வதேச நாடுகளின் முன்னிலையில் இலங்கை அரசாங்கம் இணங்கியிருந்த நிலையில், இன்று விடுதலைப்புலிகள் இல்லை என்ற காரணத்துக்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தேவையில்லை என்று அவர்கள் தட்டிக்கழித்துவிட முடியாது என்று இந்தியா, சர்வதேச நாடுகள் மற்றும் ஐ. நா ஆகியவற்றின் தார்மீக பொறுப்பை இந்த தேர்தல் விஞ்ஞாபனம் அழுத்தியுரைத்துள்ளது.

“சமஷ்டி போன்ற ஏற்றுக்கொள்ளக்கூடிய நேர்மையான எந்த ஒரு அரசியல் தீர்வினையும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் மக்களுக்கு முன்வைப்பதற்கோ அல்லது கைச்சாத்திட்ட எந்த ஒப்பந்தங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கோ அல்லது தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் மற்றும் இனப்படுகொலைகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கோ இலங்கை அரசானது கடந்த 70 வருடங்களில் முழுமையாக தவறிவிட்டுள்ளதுடன் அவற்றுக்கு தயாரற்ற தனது தன்மையையும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை, அரசாங்கம் தனது அண்மைய நிலைப்பாடாக இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லவே இல்லை என்றும் பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்றும் மிகவும் திட்டவட்டமாக அறிவித்தும் விட்டது. இதன்காரணமாக, ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்துமாறு சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவற்றிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர வேறு எந்தத் தெரிவுமே இல்லை” என்று சர்வஜன வாக்கெடுப்பை கோருவதற்கான தமது நியாயத்தை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி முன்வைத்துள்ளது.

“எரித்திரியாவில் 1990 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் பிரித்தானியாவில் ஸ்கொட்லாந்து, கனடாவில் கியூபெக், கிழக்கு திமோர், தென் சூடான், கற்றலோனியா, ஈராக்கிய குருத்தி என்று பல நாடுகளில் சர்வதேச சமூகம் பிணக்குகள் மற்றும் தேசிய இனங்களின் அதிகாரங்களை தீர்மானித்துக்கொள்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியிருக்கின்றன. வடமாகாணசபையும் கிழக்கு மாகாணசபையும் ஏற்கனவே இத்தகைய ஒரு மக்கட் தீர்ப்பெடுப்பு வேண்டும் என்று தீர்மானங்களை எடுத்திருக்கின்றன. அத்துடன் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இவ்வாறானதொரு மக்கட் தீர்ப்பெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற ஒரு மனுவில் கைச்சாத்திட்டிருக்கின்றார்கள். இந்தியாவின் தமிழ் நாடு அரசாங்கம் உட்பட உலகின் பல மாநகர சபைகளிலும் இவ்வாறான மக்கட் தீர்ப்பெடுப்பின் மூலமே இலங்கையில் தமிழ் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட முடியும் என்று தீர்மானங்களை எடுத்துள்ளனர். ” என்று குறிப்பிடும் இந்த தேர்தல் விஞ்ஞாபனம், இந்த அடிப்படையில் இலங்கையில் எத்தகைய ஒரு தீர்வு தமக்கு வேண்டும் என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்கும் வகையில் சர்வதேச சமூகம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பை உறுதிசெய்யவும் இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பதற்கும் அடுத்த கட்டமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பதற்கு சட்டரீதியானதும் அரசியல் ரீதியானதுமான எல்லாவிதமான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதி ஆகியவை தொடர்பில் தனது நிலைப்பாட்டை இந்த விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.

வடக்கு -கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்தமயமாக்கலை நிறுத்துதல் ஆகியவை தொடர்பில்
ஐ. நா மனித உரிமைகள் சபையில் தமிழர் பகுதிகளில் நில ஆக்கிரமிப்பை நிறுத்தும் தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு அல்லது ஏற்கனவே இருக்கும் தீர்மானத்தில் இதுதொடர்பில் அழுத்தமான உள்ளீடு ஒன்றை கொண்டுவருவதற்கு முயற்சி எடுக்கப்போவதாகவும் தொடர்ச்சியாக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பிலும் இராணுவமயமாக்கல் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஐ. நா வின் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு ஐ. நா சபை மற்றும் சர்வதேச நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்புவதற்கு இராணுவ வெளியேற்றம் அவசியம் என்றும் 1983 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் இருந்த நிலைகளுக்குள் இராணுவம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த விஞ்ஞாபனத்தில் குறிப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளை தீர்த்தல், பொருளாதாரம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழில்வாய்ப்பு, பனை தென்னை வள அபிவிருத்தி, கல்வி மேம்பாடு, முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று வலுவுள்ளோருக்கான நல்வாழ்வு, பெண்கள் மற்றும் விதவைகளுக்கான நல்வாழ்வு, உட்கட்டுமானங்களை அமைத்தல், விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை அபிவிருத்தி, சுகாதாரத்துறை விருத்தி, விளையாட்டு அபிவிருத்தி, வரலாறு, கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டு மேம்பாடு, இளையோர்களை வலுவூட்டல், மலையக மக்களின் நல்வாழ்வு, இந்தியாவில் உள்ள எமது அகதிகளின் மீளக்குடியமர்வு, இந்திய மீனவர்களின் அத்துமீறல், எமது சர்வதேச உறவு ஆகிய உப தலையங்கங்களின் கீழ் அவை தொடர்பில் தனது நிலைப்பாடு மற்றும் அணுகுமுறைகளை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் விளக்கியுள்ளது.

தமது அணுகுமுறைகள் எவ்வாறு ஏனைய காட்சிகளில் இருந்து வேறுபட்டவை என்றும் சிறந்தவை என்றும் விளக்கம் அளித்துள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ” பதவி மோகம், சலுகை மற்றும் சரணாகதி அரசியல் செயற்பாடுகள் ஆகியவற்றுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல தோல்விகளுக்கும் தவறுகளுக்கும் மிக முக்கியமான மற்றொரு ஒரு காரணம் ஒரு சிலர் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுத்து செயற்பட்டமை ஆகும். அந்த தவறை நாம் விடப்போவதில்லை. எமது செயற்பாடுகள் நிறுவன ரீதியான கட்டமைப்புக்களின் ஊடாக நன்கு ஆராயப்பட்டு முன்னெடுக்கப்படவிருக்கிறது. நிறுவனமயப்படுத்தல் என்னும்பொழுது அரசியல் தீர்வு விடயம் சரி, சமூக, பொருளாதார மேம்பாடு சரி எதுவானதாக இருந்தாலும் அவற்றுக்கான செயற்பாடுகளின் நிலைத்துநிற்கும் தன்மையும் உபாயங்களும் தனி ஒருவரில் தங்கி இருக்காமல் அந்த நோக்கங்கள் தொடர்பிலான கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளின் மீதான கூட்டுப்பொறுப்பிலும் பற்றுறுதியிலும் தங்கி இருத்தலாகும். இதன் அடிப்படையில், உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் தமிழ் புத்திஜீவிகளை ஒருங்கிணைத்து நிலத்திலும் புலத்திலும் கட்டமைப்புக்களை உருவாக்கி செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். நாம் மேலே குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை இந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே பெற்றுத்தரும். ” என்று குறிப்பிட்டுள்ளது.

எந்தக் கட்சியையும் விமர்சனம் செய்வது தமது நோக்கம் அல்ல என்றும் ஆனால், தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் மிகுந்த விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 11 வருடங்களில் செய்த கீழ்வரும் 13 முக்கிய தவறுகளை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இந்த விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது :

1. ஐ. நா மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை மேலும் வலுப்படுத்தி இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ஒன்றை ஏற்படுத்துவதற்கு மிகவும் பலம்பொருந்திய, வாய்ப்புக்கள் நிறைந்த எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தபோதும் அவ்வாறு செய்யாமல் போர் குற்றத்துக்கான சர்வதேச விசாரணை முடிந்து விட்டதாக பிரசாரம் செய்ததுடன் ஐ. நா மனித உரிமைகள் சபை தீர்மானத்துக்கு கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்து இறுதியில் அதனை பலவீனப்படுத்தியமை. இதன்மூலம் இனப்படுகொலை குற்றவாளிகளை ஐ. நா மனித உரிமைகள் சபையில் தண்டனையில் இருந்து பாதுகாத்ததுடன் பரிகார நீதி ஊடாக தீர்வினை பெறுவதற்கான வாய்ப்பினையும் மழுங்கடித்தமை.
2. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை இனப்படுகொலை இல்லை என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரப்புரை செய்தமை.
3. வட-கிழக்கிலிருந்தான முற்றான இராணுவ வெளியேற்றத்தை சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் அமைப்புக்களும் வலியுறுத்திவந்த நிலையில் தனியார் காணிகளிலிருந்தான இராணுவ வெளியேற்றம் போதுமென்று கூறியமை.
4. கிழக்கு மாகாண சபையை காரணம் எதுவுமின்றி இன்னோர் சமூகத்திடம் கைமாற்றியமை (முஸ்லிம் காங்கிரசிடம் கொடுத்தமை).
5. வடக்கு மாகாண சபையை இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றியமைக்காக தொடர்ந்து செயற்படவிடாமல் முடக்கியதுடன் முதலமைச்சர் நிதியத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்காமை.
6. வவுனியா வடக்கு முதல் முல்லைத்தீவு வரை நல்லாட்சியென்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றங்களும் இராணுவ குடியேற்றங்களும் ஏற்படுத்தப்படுவதற்கும் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதற்கும் உடந்தையாக இருந்தமை. இந்தக் குடியேற்றங்களை நிறுவுவதற்காக யுத்தம் நடைபெற்ற காலங்களை விடவும் மிகவும் பெருமளவு நிதி பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டபோது பாராளுமன்றத்தில் அவற்றுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய ஒரு குற்றத்தை இழைத்துள்ளமை.
7. நாவற்குழி, வவுனியா வடக்கு வெடுக்குநாரிமலை, திருக்கேதீஸ்வரம், கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகம், வலிகாமம் ஆகிய இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதற்கும் எமது தலைநகராம் திருகோணமலையில் கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் இடிக்கப்பட்டு பௌத்த கோவில் கட்டப்படுவதற்கும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு எந்த எதிர்ப்பையும் வெளியிடாமை.
8. ஓர் (இலங்கை) அரசு செய்யும் போர்குற்றத்தை மூடி மறைப்பதற்காக அவற்றை இனப்படுகொலையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக, விடுதலைக்காகப் போராடிய இளைஞர்கள் செய்த குற்றங்களுடன் ஒப்பிட்டு சமன் செய்தமை.
9. இனப்பிரச்சினைக்கான தீர்வை இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்குள் கொண்டு சென்று இனப்பிரச்சினை தீர்வுக்கான பிரத்தியேகமான பேச்சுவார்த்தை வழிமுறைகளை இல்லாமல் செய்தமை.
10. வராத ஒரு தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கோட்பாடுகளான வடக்கு கிழக்கு இணைப்பு, இறைமை என்பவற்றை கைவிட்டும் ஒற்றையாட்சி மற்றும் பௌத்தத்திற்கு முதல் உரிமை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டும் தமிழர் தரப்பை பலவீனப்படுத்தியமை.
11. தேசிய நீக்க, உரிமை நீக்க அரசியலை மேற்கொண்டு 70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ் மக்களின் உரிமை அரசியலை சலுகை அரசியலாக மாற்றியமை.
12. எஸ். ஜே. வி. செல்வநாயகம் மற்றும் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்கள் இலங்கையின் சிங்கக் கொடியை நிராகரித்தும் சுதந்திர தினத்தை கரி நாளாகத் தொடர்ந்து பிரகடனப்படுத்தியும் வந்த நிலையில் எதிர்க்கட்சி தலைமைப் பதவியை தக்க வைப்பதற்காகவும் சலுகைகளுக்காகவும் சிங்கக் கொடியை ஏற்று கையில் ஏந்தியதுடன் சுதந்திரதின நிகழ்வுகளிலும் கலந்துகொண்டமை.
13. 11 வருடங்கள் தமிழ் மக்கள் வழங்கிய வாய்ப்புக்களை தமது பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் பயன்படுத்திய பின்னர், எதிர்வரும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறப்போவதாக தற்போது வெளிப்படையாக அறிவித்துள்ளமை.