பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

1596455615 Puttalam GA 2
1596455615 Puttalam GA 2

புதன்கிழமை (05) நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலருமான சந்திஸ்ரீ பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், புத்தளம் மாவட்டத்தில் உள்ள 5 தேர்தல் தொகுதிகளிலும் இருந்து 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இந்த தேர்தலில் பிரதான அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 374 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 6 இலட்சத்து 17 ஆயிரத்து 370 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக 421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், இம்முறை புத்தளம் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 932 பேர் தபால் மூல வாக்களிப்பில் கலந்துகொண்டனர். இந்நிலையில், 88 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 10 தபால் மூல வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, தேர்தல் கடமைகளுக்காக 5800 அரச உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதுதவிர, 2600 இற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கற்பிட்டி முகத்துவாரத்தில் சுமார் 725 இற்கும் அளவான வாக்காளர்;கள் இருக்கின்ற போதிலும் அவர்களுக்கு வாக்களிப்பதற்காக முகத்துவாரத்தில் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளதுடன், 215 வாக்காளர்களைக் கொண்ட பூக்குளம் கிராமத்திலும் ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்படவுள்ளதுடன் இரண்டு பகுதிகளில் இருந்தும் வாக்குப்பெட்டிகளை கொண்டுவருவதற்கு கடற்படையினரின் உதவிகளையும் பெற்றிருக்கிறோம்.

இதேவேளை, வன்னியில் நிரந்தர வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துள்ள வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வாக்காளர்கள் 6275 பேர் இம்முறை புத்தளத்தில் தமக்கு வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்குமாறு தேர்தல் திணைக்களத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அவர்களின் அந்த வேண்டுகோளுக்கிணங்க அதற்குரிய ஏற்பாடுகளை செய்துகொடுக்கும்படி தேர்தல் அலுவலகம் எமக்கு வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய அவர்களுக்கு புத்தளத்தில் வாக்களிப்பதற்காக 12 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களைப் போன்று இம்முறையும், சுமூகமான முறையில் சுதந்திரமாகவும், நடுநிலையாகவும் தேர்தல் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தாமதங்கள் ஏற்படாதவாறு வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும். நாளை காலை (04) வாக்குப் பெட்டிகள், வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவித்தார்